Tuesday 30 May 2023

தமிழர்களே! நமது முன்னேற்றமே நமக்கு முக்கியம்!

 

தோழர்களே! தவறாக நினைக்க வேண்டாம். நமது முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

தமிழ் திரைப்படம் ஒன்றின் ஷூட்டிங் இப்போது ஈப்போவில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மாதம் அதன் ஷூட்டிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் வந்த வேலை சிறப்பாக நடைபெற வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

நடிகர்களைப் பார்க்க வேண்டும்,  பேச வேண்டும் அவர்களோடு படம் எடுத்துக்கொள்ள வேண்டும்  என்பதெல்லாம் எல்லாக் காலங்களிலும் உள்ள ஒரு பழக்கவழக்கம் தான். புதிது ஒன்றுமில்லை.

வந்திருப்பவர்களை சும்மா நடிகர்களாக மட்டும் பார்ப்பது மட்டும் தான் நமது கடமை என்பதாகப் பார்க்க வேண்டாம். அந்த இடத்தைப் பிடிக்க  அந்த நடிகர்கள் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

இப்போது நமது இளைஞர்கள் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.  உழைக்காமலே முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் என்றுமே நடப்பதில்லை.

கொரோனா காலத்தில் யார் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது நமக்குத் தெரியும். நமது சமுதாயத்திற்குத் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. வேலை இல்லை. கையில் இருப்பு இல்லை அதனால் கையில் காசில்லை.  ஒரு சில நல்ல உள்ளங்கள் அதாவது கையில் இருப்புள்ள நல்ல உள்ளங்கள், உதவிகள் செய்தனர்.

நாம்,  இந்த நடிகர்களை,   வெறும் நடிகர்களாகப் பார்க்கக் கூடாது. இந்த உயரத்திற்கு வர எந்த அளவுக்கு அவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த உழைப்பைத் தான் நாம் அவர்களிடாமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதனை மறந்து விடுகிறோம். 

சான்றுக்கு நடிகர் யோகி பாபு ஐந்துக்கும் பத்துக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் அல்லாடிக் கொண்டிருந்தவர். நடிகை ஒருவர் கை கொடுக்க பின்னர் அவர் காமடி நடிகராக மாறிவிட்டார். ஒரு ஸ்டண்ட் நடிகர் காமடி நடிகராக வேண்டுமென்றால் எத்தகைய உழப்பு வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். சினிமா உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். அதில் வெற்றி பெற கடுமையான உழைப்பு வேண்டும்.  அவர் மட்டும் அல்ல கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதியும் எத்தனை தடங்கல்களையும் தாண்டி இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார் என்பதெல்லாம் நமக்குப் பாடங்கள்.

இவர்களின் முன்னேற்றத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். நம்மையும் நாலு பேர் மதிக்க வேண்டும். மெச்ச வேண்டும். வாழ்க்கையில் உயர வேண்டும். வாழ்க்கை நெடுகிலும் நாம் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை! நமக்கும் நாலு பார்வையாளர்கள் இருக்கும் அளவுக்கு நமது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment