Wednesday 13 March 2024

கொஞ்சம் காதில் போடுங்களேன்!


 ரம்லான் மாதத்தில் ஏகப்பட்ட உணவுகள் குப்பைகளுக்குப் போகின்றன என்பதையறியும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய?  நோன்பிருப்போர்  சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!

ஆனால் நம்மிடையே ஒரு கேள்வியும் உண்டு.  ரம்லான் அல்லாத மற்ற மாதங்களில் மலேசியர்கள் உணவுகளை வீணடிப்பது இல்லையா?  அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது.  வீணடிப்பு என்பது எப்போதுமே உண்டு. 

அதனால் தான்   அந்தப் பழக்கத்தை நம்மால் விட்டுவிட முடியவில்லை.  தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்.  நம் தாய் எப்படி நம்மை வளர்த்தாரோ அதன்படி அனைத்தையும் சுடுகாடு மட்டும் கொண்டு தான் செல்லுவோம்!  நமது பழக்க வழக்கங்களைத் தாயிடமிருந்து தானே  கற்றுக் கொள்கிறோம்?  இடையிலே நம்மால் நிறுத்த முடிவதில்லை!

கடந்த பத்தாண்டுகளாக,  பினாங்கு பயனீட்டாளர் சங்கம்,  இந்த உணவு வீணடிப்பு சம்பந்தமாக பல பிராச்சாரங்களை  மேற்கொண்டு வந்தாலும் அது ஏனோ போய் சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை.  அதனால் தொடர் பிரச்சாரங்கள்  தொடர்கின்றன.   சென்ற ஆண்டு மட்டும் ரம்லான் மாதத்தில் சுமார் 90 ஆயிரம் டன் உணவுகள்  குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சமடைந்திருக்கின்றன.

ஒன்று வியப்பைத் தருகிறது.  ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தைப் புறக்கணியுங்கள் என்று சொன்னதும் அதனை  வெற்றிகரமாக நிறைவேற்றியவர்கள்  மலேசியர்கள். இப்போது அந்நிறுவனமே நம்மை வருந்தி வருந்தி அழைக்கிறது!

இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் உண்டு.  அம்னோ இளைஞர் பகுதி வாய் திறந்தால் அது நடக்கும் என்றே அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.  இதனை அவர்கள் ஏன் கையில் எடுக்கக் கூடாது?  மக்கள் அவர்களது குரலுக்குச் செவிசாய்ப்பார்கள் என நம்பலாம் தானே.  பாலஸ்தீன, காஸா பகுதியில் நிலவும் அசாதாரண நிலைமை அவர்களுக்குத் தெரியாமலா போகும்.  உணவு இல்லாமல் அவர்கள் படும் துயரம்  நாளுக்கு நாள் மோசமடைந்து போய்க்கொண்டிருக்கிறதை  நாம் அறியாமலா இருக்கிறோம்.  அறிகிறோம். அறிந்து என்ன செய்கிறோம்? 

நாம் எதனையும்  யார் மீதும் அழுத்தம் கொடுக்கவில்லை.  உணவு வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகிறோம்.  நமது குடும்பத்திற்கான தேவைகள் என்ன  என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.  அதனை வைத்து நாம் உணவுகளை 'பட்ஜட்' போட்டு வாங்களாம்.  இந்திய முஸ்லிம் குடும்பங்களில் எதையும் வீணடிக்க மாட்டார்கள்.  அங்கே ஓர் ஒழுங்கு உண்டு. அதனையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்.

சொல்லிவிட்டோம். நெஞ்சம் பொறுக்கவில்லை. கொஞ்சம் இதனையும் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.  அவ்வளவு தான்.

No comments:

Post a Comment