Tuesday 5 March 2024

இது என்னா கணக்கு?

மக்கள் தொகைக்  கணக்கெடுப்பில்  குளறுபடிகள் இருபதாகக் காதில் விழுகிறது!

ஆனாலும் நம்மால் என்ன செய்ய முடியும்? நமக்கு என்ன  அதிகாரம் உண்டு கேள்விகள் கேட்க?

கணக்கெடுப்பை எடுத்தவர் யார்? எப்படியோ  எடுத்தவர்களில் இந்தியர் யாரும் இருக்க நியாயமில்லை.   கணக்கு எடுக்கும் போதே இந்தியர்களைக் குறைத்து எடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்திருப்பார்களோ,  அதுவும் தெரியவில்லை. 

இந்தியர்களைப் பொறுத்தவரை யாரும் எதுவும் செய்யலாம், எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம், யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது - இதற்கு என்று  வாய் திறக்காத சில தலைவர்கள் - இது தான் இன்றைய நமது நிலவரம்.  தலைவர்கள் அவர்கள் வேலையைத்   தவறாமல்  செய்கிறார்கள்!

நமது மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாம் 6.6 விழுக்காடு என்கிறார்கள்.  அந்த செய்தி மட்டும் மிகத் துல்லியமாக இருக்கிறது.  எத்தனை இலட்சம் என்று வரும்போது  கணக்கு வித்தியாசப்படுகிறது.  எப்படியோ சுமார் 23 அல்லது 24 இலட்சமாக இருக்கக்கூடும்.

இங்கே நமக்குள்ள கேள்வி:  கடந்த பத்துமலை திருவிழாவின் போது  கூடிய பக்தர்கள் சுமார் இருபது இலட்சம் என்கின்றனர். அது கோலாலம்பூர் பத்துமலையில் மட்டும்.   இன்னும் பற்ற மாநிலங்களில் கோவில்கள் உள்ளன. இவர்களையெல்லாம் கணக்கெடுத்தால் இன்னும் சில இலட்சங்களுக்கு மேல போகும்!   அதாவது நமது மக்கள் தொகையை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது எப்படி?  என்பது  கேள்விக்குறியே!   சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையாக இருக்குமோ!

எப்படியோ நமக்கு ஒன்று புரிகிறது.   கணக்கெடுப்பு கண்துடைப்போ என்று  சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.  நம்முடைய ஆதங்கம்  எல்லாம் குறைவான எண்ணிக்கையை வைத்து நமக்குக் கிடைக்கும் சில  உரிமைகள்  பறிபோகும்  என்று சொல்லப்படுகிறது.

ஒரு சமுதாயம் பலவீனப்பட்டுப் போனால்   என்ன நடக்கும் என்பதற்கு  இது ஒரு சான்று. பலவகைகளில் நாம் புறக்கணிக்கப்படுவோம்.  இப்போதே பலர் அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  புறக்கணிக்கவும் செய்கின்றனர்!

நாம் பலவீனமான  சமுதாயமாக இருக்கலாம். ஒன்றை மறந்து விடாதீர்கள். பொருளாதார ரீதியில் பலமான சமுதாயமாக நம்மால் மாறமுடியும்.  அது நமது கையில் இருக்கிறது.  பொருள் உள்ளவராக நாம் மாறிவிட்டால் அனைத்தும் நம்மைத் தேடி வரும்!

கணக்குச் சரியில்லை என்றாலும்  அடுத்த கணக்கெடுப்பு வரை காத்திருக்கத்தான் வேண்டும்! 

 

No comments:

Post a Comment