Thursday 7 March 2024

இன்னும் மூடுகிற நிலைமைதானா?

 



கோரானா காலத்திற்குப் பிறகு எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டன. ஒன்றும் அதிசயமல்ல.  எல்லாம்  வழக்கம் போல கடந்து போய்விட்டன.  பல நிறுவனங்கள்  வேறு நாடுகளுக்கு மாறிவிட்டன.

ஆனால் "Goodyear"  நிறுவனம்  ஷா ஆலமிலுள்ள  தனது தொழிற்சாலை  வருகிற  ஜூன் மாதத்தில்   மூடுவிழா காணும்  என்று அறிவித்திருப்பது  அதிர்ச்சியமான செய்தி என்பதில் சந்தேகமில்லை. 

கூட் இயர்  நிறுவனம் என்பது மிகவும் பெயர் பெற்ற ஒரு நிறுவனம்.  ஏறக்குறைய மலேசியாவில் நூறு ஆண்டுகளை எட்டவிருக்கும் ஒரு நிறுவனம். கார் டயர்கள் என்றாலே  அந்நிறுவனத்தின் டயர்கள்  தான் கண்முன்னே வரும்.  எனது சிறு வயது முதலே அந்நிறுவனத்தின்  விளம்பரங்களை நான் பார்த்து வருகிறேன். அதாவது பள்ளி காலத்திலிருந்தே!

மிகவும் புகழ் பெற்ற ஒரு நிறுவனம்  இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம்  என்று தெரியவில்லை. அரசாங்கம் அதற்கான காரணத்தை தெரிந்திருக்கலாம்.  பெருந்தொற்று காலத்தில் பல தொழிற்சாலைகள்  மூடப்பட்டதற்கான காரணம் நமக்குத் தெரியும்.   ஆனால் இப்போது எந்தக் காரணமும் இல்லையென்றாலும்  முடிந்தவரை அரசாங்கம்  அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதா  என்பது தெரியவில்லை. 

இன்று நம்மிடையே வேலையில்லாதவர்கள் நிறையவே இருக்கின்றனர். இந்த நிலையில் இருக்கின்ற தொழிற்சாலைகளும்  மூடப்படுகிறது என்றால்  நாம் சரியான பாதையில் தான் செல்லுகின்றோமா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் நாட்டுக்குள் வருவது  நல்ல செய்திகள் தான். ஆனால் அந்த முதலீடுகள் இன்றோ நாளையோ வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திவிட முடியாது. அது ஒரு சில ஆண்டுகள் பிடிக்கலாம்.  இப்போது மலேசியர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுக்கும்  தொழிற்சாலைகளைத் தக்கவைத்துக்கொள்ள   அரசாங்கம் தீவிர முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.

புதிய முதலீடுகள் வருவதற்குள் இருப்பவை  'தொடைத்துக்' கொண்டு போனால்  நாட்டில் வாழ்வதற்கே இடமில்லாமல் போய்விடும்.  மக்கள் வாழ்வாதாரத்திற்கே  வழியில்லை என்றால்  என்ன செய்வார்கள்? வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் என்ன செய்வார்கள்?

ஏற்கனவே நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகள்  தொடர்ந்து இயங்க வேண்டும்.  அதுவே நமது வேண்டுகோள்.


No comments:

Post a Comment