Friday 8 March 2024

கேவலப்படுத்தாதீர்கள்!

 

பெண்கள்  வேலைக்குப் போவது என்பது புதிதல்ல. அது எல்லாகாலங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் பெண்கள் வியாபாரங்களில் ஈடுபடுவது என்பது குறைவு தான். அதனையும் சீனப் பெண்கள்  என்றோ கைப்பற்றி விட்டனர். மலாய்ப் பெண்கள் அர்சாங்கம் கொடுக்கும் ஊக்குவிப்பால், பண உதவியால்  வளர்ந்து வருகின்றனர்.  இதில் நமது பெண்கள் மட்டும் தான்  பின் தங்கி இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது.

நமது பெண்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.  பெரும்பாலும் அவர்கள் தங்களது கையிருப்பை வைத்துக் கொண்டு தான் சிறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.  பணம் இருந்தால் அவர்களது சாமர்த்தியமே தனி.

சீன, மலாய் பெண்கள் எதிர்நோக்காத  சில பிரச்சனைகளை நமது இந்தியப் பெண்கள்  எதிர்நோக்குகின்றனர். நமது இந்திய இளைஞர்களைத் தான் நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. அவர்களது வீட்டில் குடிகார அப்பன் செய்கின்ற அனைத்தையும்  இந்திய இளைஞர்கள் வெளியே செய்கின்றனர்!

வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களைக் கேலி, கிண்டல் செய்வது, அவர்களின் மனதை  நோகடிப்பது  - இப்படித்தான் இவர்கச்ளின் வாழ்க்கை முறையே அமைந்திருக்கிறது!  நமது பெண்கள் இவைகளை எல்லாம் கடந்து தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.

ஒரு சிலர் 'டிக் டாக்'  கில் விளம்பரம் செய்கிறார்கள்.  தவறு ஒன்றுமில்லை. 'கமென்'  வரத்தான் செய்யும். நல்லது வரும்போது  பாராட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.   தவறாக வரும்போது அதனைப் பொருட்படுத்தாதீர்கள். உண்மையான  தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது  திருத்திக் கொள்ளுங்கள்.  கேலி கிண்டல் என்றால்  அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.  புறந்தள்ளுங்கள்! அவ்வளவு தான்!

நமது பெண்கள் எதனைச் செய்தாலும் அதனைக் குறை சொல்ல ஒரு கூட்டம் வரத்தான் செய்யும். அது அவர்களுக்கு விளையாட்டு!  அதனைப் பெரிது படுத்தாமல் நாம் கடமையே கண்ணாயிருந்தால்  அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்!

பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு சிலருக்கு நாம் சொல்லுவதெல்லாம் நீங்களும் அதே கேவலத்திற்கு உள்ளாவீர்கள்.  மறந்து விடாதீர்கள். ஒவ்வொரு செயலுக்கும்  சமமான எதிர்வினை உண்டு. எதிர்வினை வரும்போது தான் உங்கள் புத்திக்கு அது எட்டும்.

யாரையும் கேவலப்படுத்த வேண்டாம். அதுவும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களது ஆதரவு தான் தேவை.
 

No comments:

Post a Comment