Saturday 9 March 2024

'மாமாக் 'உணவகங்களில் என்ன நடக்கிறது?

பொதுவாக  'மாமாக்' உணவகங்களுக்கு என்னதான் ஆயிற்று என்று கேட்கின்ற  அளவுக்கு  அந்த உணவகங்களின் நிலைமை  வரவர மோசமடைந்து வருவதாகவே நமக்குத் தோன்றுகிறது.

என்ன  தான் காரணமாக இருக்க முடியும்?  நான் வழக்கமான ஒரு வாடிக்கையாளன்.  எனது பள்ளி காலத்திலிருந்தே நான் வாடிக்கையாளன் தான். அப்போது எல்லாம் பரோட்டா ரொட்டி  (ரொட்டி சானாய்)  அவர்களின் கடையில் தான் கிடைக்கும். பள்ளி காலங்களில் அதனைச் சாப்பிட்டே வளர்ந்தவன். இப்போதும் கூட அவர்களின் மீ கோரிங் எனக்குப் பிடிக்கும்.

சமீபகாலங்களில் அவர்களின் உணவகங்களைப் பற்றியான புகார்கள் அதிகமாகவே வருகின்றன.  மாமாக் உணவகங்கள் பெரும்பாலும் அதிகமான மலாய்  வாடிக்கையாளர்களைக் கொண்டவை.  

இந்திய வாடிக்கையாளர்களை அவர்கள் குறை சொல்ல முடியாது.  இந்தியர்கள் தான் எதற்கெடுத்தாலும் குறை சொல்லுபவர்கள் என்கிற குற்றச்சாட்டில் நியாயமில்லை.  சமீபத்தில் வந்த குற்றச்சாட்டு  ஒரு மலாய்க்கார வாடிக்கையாளரால் கொண்டுவரப்பட்டது. சரி அது யாராக இருக்கட்டும்  அதுவல்ல  பிரச்சனை.  குடிக்கும் மைலோவில்  கண்ணாடித் துண்டுகள்  இருப்பது  ஒன்றும் சாதாரண விஷயமல்ல.  எந்த வாடிக்கையாளாராக  இருந்தால் என்ன?   அறியாமல் குடித்திருந்தால்? குழந்தைகள் குடித்திருந்தால்?  அவர்கள் நிலை என்னாவது?

இது போன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது 'கடை சுத்தமில்லை'  என்று கூறி இரண்டு வாரங்களுக்குக் கடையை அடைப்பதும்  அதன் பின்னர் 'எல்லாம் சரியாகிவிட்டது'  என்று கடையைத் திறப்பதும் சும்மா கண்துடைப்பு வேலையாகவே தோன்றுகிறது.  சுகாதார அமைச்சு தனது பணியைச் சரியாக  ஆற்றவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

சும்மா இரண்டு வாரம், மூன்று வாரம் தண்டனை என்பதெல்லாம்  அது எத்தகைய குற்றச்சாட்டு என்பதைப் பொறுத்தது.  எல்லா குற்றங்களுக்கும் பொருந்தாது. இந்தக் குற்றச்சாட்டு மிகக் கடுமையானது.  அவர்கள் உரிமம் பறிபோயிருக்க வேண்டும்.  அவர்களுக்கு அதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை.   வேறு ஒரு இடத்தில் புதிய பெயரில் புதிய உணவகத்தை ஆரம்பித்து விடுவார்கள்!    மாமாக்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

மாமாக் உணவகங்களுக்கு இப்படி ஒரு அவப்பெயர்  வருவது நமக்கு வருத்தமளிக்கிறது.   நம்முடைய ஆலோசனை எல்லாம்  உங்களுடைய ஊழியர்களை நல்லபடியாக நடத்துங்கள்.  அவர்களை அலைய விடாதீர்கள். அவர்களைத் துன்புறுத்தினால் அதற்கான பலனை நீங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

கடை முதலாளிகள்  தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால்  இது போன்ற சம்பவங்கள் தொடரவே செய்யும்.

No comments:

Post a Comment