Tuesday 5 November 2024

இனி 'உலக நாயகன்' வேண்டாம்!

             
தமிழ் சினிமாவின்  முதன்மை  கதாநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் "இனி  என்னை  உலக நாயகன்" என்று அழைக்க வேண்டாம்  என தனது  X  தளத்தில் அறிவித்திருக்கிறார்.

நம்மைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இது போன்ற பட்டங்களைப் பெரும்பாலானோர் விரும்பத்தான் செய்கின்றனர்.  இன்றும் இது போன்ற பட்டங்களுக்கு மரியாதை இருக்கத்தான் செய்கின்றது.

ஏற்கனவே 'தல'  இனி எனக்கு வேண்டாம் என்று அஜித்குமார்  கூறிவிட்டார்.  இன்னும் பல கதாநாயகர்களுக்குப் பலவிதமான பட்டங்கள். அது தேவையோ இல்லையோ, பொருத்தமானதோ பொருத்தமற்றதோ  ஆனாலும் அவர்கள் அந்தப் பட்டங்களை விடத் தயாராக இல்லை.  அவர்களிடம் கேட்டால் இரசிகர்கள் மேல் குற்றம் சுமத்துவார்கள்.  "நாங்கள் விரும்பவில்லை, இரசிகர்கள் தான் அதனைப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறுவதும் உண்டு.

நமது கமல்ஹாசனை எடுத்துக் கொண்டால் "உலக நாயகன்" என்பது அவருக்குப் பொறுத்தம் தான்.  நடிப்பில் பல எல்லைகளைத் தொட்டவர்.  அவரை மிஞ்ச ஆளில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.  அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். இப்படி ஒரு முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது  நமக்குப் புரியவில்லை. ஆனாலும் அவரின் முடிவை நாம் மதிக்கிறோம்.  இரசிகர்களும் மதிக்க வேண்டும்.

கமல் அரசியலிலும் இருக்கிறார்.   இது போன்ற பட்டங்கள்  அரசியலில் அவருக்குப்  பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற  சாத்தியமும் உண்டு. காரணம் உலக நாயகன் என்கிற போது அது சினிமா சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை.  அதனை எதில் சேர்ப்பது என்பதும் புரியவில்லை. கொஞ்சம் சிக்கலும் உண்டு.  அவர் அரசியலில் இல்லாவிட்டால்  ஒரு வேளை இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார்.

ஆனாலும் அவரின் வேண்டுகோளை நாம் மதிப்போம். இனி அவர்  கமல் அல்லது கமல்ஹாசனாக இருக்கட்டும்.

Monday 4 November 2024

அலட்சியம் வேண்டாம்!

நாய்களை அலட்சியமாகப் பார்ப்பவர்கள் உண்டு. அதே சமயத்தில் நாய்களைக் குழந்தைகளாகப் பார்ப்பவர்களும் உண்டு. ஏன்? நாய்களை 'நாய்' என்று சொன்னாலும் கோபப்படுகிறவர்களும் உண்டு.

உண்மையில் நாய்கள் ஓர் அற்புதமான பிராணி. நன்றிக்கு உதாரணம் நாய் தான்.  சமீபத்தில் காலஞ்சென்ற இந்திய தொழிலதிபர் ரத்தன் டாட்டா,    தான் வளர்த்த நாய்க்குக் கூட அதன் வளர்ப்புக்கென ஒரு தொகையை தனது உயிலில்  ஒதுக்கியிருக்கிறார்.

ஆனால் நாய்களின் அருமைத் தெரியாத சில எருமைகள் நாய்களை எப்படியெல்லாம் கொன்று குவிக்கின்றனர் என் அறியும் போது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.

அவைகள் தெரு நாய்கள் என்பது நமக்குப் புரிகிறது. அவைகளையும் ஓர் உயிர் என்று தான் பார்க்க வேண்டும். அவைகளைச் சுட்டுத்தள்ளினால்  அப்போதே அவைகளின் உயிர் போய்விடும். வேறு வகைகளில்  அவைகளைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதும், சாகடிப்பதும், அடித்துக் கொல்லுவதும்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையாள்பவர்கள் கொலைகாரர்களாகத்தான்  நாம் நினைக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய ஒரு நிகழ்வில் நாய்களைக் கொன்று,  அவைகளைப் புதைக்கும் போது,  உயிரோடு  அதன் குட்டிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காமல்,  புதைத்திருக்கின்றனர்.  அவர்கள் அரசாங்க ஊழியர்கள்.  தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள்.  ஆனால் உயிரோடு உள்ள  ஜீவன்களைப் புதைப்பதற்கு எப்படி மனம் வந்தது என்பது நமக்குப் புரியவில்லை.

தெருநாய்களைக் கொல்லுவதற்கு இது தான் வழியா  வேறு வழிகளே இல்லையா என்பது நமக்கும் தெரியவில்லை.  மற்ற நாடுகள் இதனை எப்படிக் கையாள்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனாலும்  சரியான,  நியாயமான வழிகள் இருக்கத்தான் செய்யும்.

எல்லாமே உயிர்கள் தாம். தெருநாய்கள் எப்படி உருவாகின்றன? இன்று கொஞ்சி கொஞ்சி வளர்ப்பவர்கள்  கொஞ்சம் நாள்களில் அந்த நாய்களைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள்.  பாவம்! அந்த நாய்கள் தெருவுக்கு வந்ததும் பசி பட்டினியால் வாடுகின்றன.

நாய்கள் தானே  என்கிற அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பொறுப்போடு  பார்த்துக் கொள்ளுங்கள்.  இதைத்தவிர வேறு என்ன சொல்ல?  அரசாங்க ஊழியர்களே கொஞ்சம் மனிதாபிமானத்தோடு  நடந்து கொள்ளுங்கள். 

Sunday 3 November 2024

என்னடா இதே பொழப்பா போச்சு!

ஸ்ரீவடகார பத்ர காளியம்மன் நிர்வாகத்தினர் நில அலுவலகத்தில் மகஜர் அளிக்கின்றனர்

நம் நாட்டில் அரசாங்கத்தில்  பணிபுரிபவர்கள் பலர் கசமுசா வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருக்கின்றனர்!  அதுவும் குறிப்பாக இந்து  கோவில்கள் என்றால் அவர்களுக்கு கற்கண்டு மாதிரி. சீனர்களின் கோவில்களோ, பள்ளிவாசல்களோ  அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை.  அப்படி ஒரு எளிமையான  கணக்கை அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர்!  மற்றவர்களின் கோவில்களில்  கை வைத்தால் செருப்படி விழும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

இன்று நம் நாட்டில் பிரச்சனைகள் உள்ள கோவில்களைப் பார்த்தால்  எல்லாமே ஏதோ ஒரு வகையில் மாநில,   நில அலுவலகங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கின்றன.  கோவில்களை உடைப்பதில் இவர்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?  துட்டு கிடைத்தால் எவனும் எதையும் செய்வான்! அது தான் தெரிந்த கதையாயிற்றே!  

இன்றைய நிலையில் இந்தியர்கள் பெரும்பாலும் பிரதமர் அன்வாரை ஆதரிப்பவர்களாக இல்லை.  எதை எதையோ பேசுகிறார் ஆனால் உயர்கல்வியில் இத்தனை இந்திய மாணவர்களை   அதிகரித்திருக்கிறேன், இத்தனை புதிய இந்திய வியாபாரிகளை  உருவாக்கியிருக்கிறேன் என்று அவரால் சொல்ல முடியவில்லை.   காரணம் அவர் செய்யவில்லை.

அரசாங்க அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் எல்லாம்  பிரதமர் மீது தான் விழுகின்றன.  கோவில் இடிப்பா, தமிழ் பள்ளிகளின் ஏதேனும்  பிரச்சனைகளா, வேலை வாய்ப்புகள் இல்லையா மக்கள் என்ன சொல்லுகிறார்கள்? அன்வார் பதவிக்கு வந்த பிறகு தான்  இப்படியெல்லாம் நடக்கின்றன என்று சொல்லுவதை  தவிர்க்க முடியவில்லை.   அவருக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்  ஆனால் அவர் தான் இந்தியர்கள் மத்தியில் குற்றவாளி ஆகிறார்.

அதுவும் கோவில் பிரச்சனைகள் ஏராளம்.  இப்போது தான் அவைகள் பெரிதுப் படுத்தப்படுகின்றன.  அன்வார் கோவில்களுக்கு எதிரானவர்  என்கிற  தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காரணம் அவரின் ஒரு சில நடவடிக்கைகள்  அப்படியெல்லாம் சொல்ல வைக்கின்றது.

நமக்கும் சீ! இதென்னடா பிழைப்பு என்று சொல்ல வைக்கிறது.  எப்போது பார்த்தாலும் இந்தியர்களை எதிரிகள் என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறார்களே! என்ன செய்ய?

Saturday 2 November 2024

ஆஸ்ரமங்களா இவை?

இப்போது நாடெங்கிலும் பலவித ஆஸ்ரமங்கள். தேவை தான் என்பதில்  ஐயமில்லை. ஆனால் நல்ல நோக்கத்தோடு  அவைகள் செயல்படும் போது நமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.  பணத்தை  நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆஸ்ரமங்களும் உள்ளன.  ஒன்றிண்டு அல்ல பல உள்ளன. எப்படி தான் போனாலும் கடைசியில் பணம் தான்!

ஆகக் கடைசியாக கெடாவில்  உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கான ஓர் ஆஸ்ரமத்தில் நடந்தவைகளைப் பார்த்திருப்போம். வயதானவர்கள், மனநலம் குன்றியவர்கள்  நடக்க இயலாதவர்கள் என்றும் பாராமல்  அவர்களைச் சங்கலியால்  கட்டிப்போட்டும் அடித்தும் துன்புறுத்தியும் வந்திருக்கின்றனர்.  இதனைக் கண்காணிக்க வேண்டியவர்கள்  கண்ணை மூடிக்கொண்டு காணிக்கையை மட்டும் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

ஆனால் அதன் இறுதிக் காட்சிகள் தான் நம்மைப் பதற வைக்கின்றது.   அதனை நடத்தி வந்தவன்  அந்த ஆஸ்ரமத்தில் இருந்த 21 பேரையும் வீதியில் விட்டுவிட்டு ஓடிப்போனான்!  எப்படியோ நல்ல உள்ளங்கள் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து அந்த முதியவர்களை நிம்மதியான ஒரு இடத்தில் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

ஆஸ்ரமங்கள் நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல.  கொஞ்சமாவது இரக்கம் வேண்டும். பணம் தான் நோக்கம் என்றால்  இரக்கம் எல்லாம் பறந்து போகும்!

அதனால் தான் சீனர்கள் பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்கின்றனர். ஏதும் குறைகள் இருந்தால்  அவர்களை நாம் தட்டிக் கேட்கலாம். அவர்கள் குறைகள் இல்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். சீனர்கள் முதியோர் இல்லங்களைக் கட்டணங்கள் வாங்கிக் கொண்டு நடாத்துகின்றனர்.  அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் இந்தியர்கள் தொண்டு என்கிற  பெயரில் இலவசமாக செய்கிறோம் என்கிற பெயரில்  பணத்தை நோக்கி தான் பயணம் செய்கின்றனர். நிறைய உதவிகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களின் குடும்பமே ஆஸ்ரமத்தை நடத்துகின்றனர். இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் கசப்பான அனுபவங்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.  தேவையான உணவுகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை. 

இது தான் இன்றைய ஆஸ்ரமங்களின் நிலை! நல்லவர்கள் நடத்தும் ஆஸ்ரமங்களை வாழ்த்துவோம்.

Friday 1 November 2024

வீட்டு பணிப்பெண்கள்

                   
                                           வீட்டு பணிப்பெண்
பொதுவாகவே பல மலேசியர்களின்  வீடுகளிலே  பணிப்பெண்களின்  சேவை மிக முக்கியம்  என்கிற நிலைமையில் தான்  இருக்கின்றனர். காரணம் இவர்களில் பலர் - கணவன் மனைவி -  இருவருமே வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழல் தான்  நிலவுகிறது.

நாம் அதுபற்றி குறை ஏதும் சொல்லப் போவதில்லை.  ஆனால் வேலை செய்து பிழைக்கும் இவர்கள் தான் தங்களின் வீடுகளில்  வேலை செய்யும் வேலைக்காரப்  பெண்களிடம் எப்படியெல்லாம் அதிகாரம் பண்ணிக்கொண்டு  அட்டுழியம் புரிவதை செய்திகளில் பார்க்கிறோம்.  

நமக்கு வருத்தம் தான்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள். உங்களின் நலன் காக்க சங்கங்கள்  உண்டு.  தொழிலாளர் அமைச்சு உள்ளது.  உங்களுக்குப் பிரச்சனைகள் வரும் போது  உங்கள் சங்கங்கள் உங்களுக்காகப் போராடும்.

ஆனால் இப்படி வேலையில் இருக்கும் உங்களுக்கு  உங்கள் வீட்டில் பணி புரியும் வேலைக்கார பெண்களுக்கு  நீங்கள் எந்தவொரு சலுகைகளும் கொடுப்பதில்லை.  சலுகைகளை விடுங்கள்.  அவர்களுக்கான ஊதியம் கூட கொடுப்பதில்லை.  உணவும் கொடுப்பதில்லை.  ஏன் அவர்களை மனிதர்களாகக் கூட  மதிப்பதில்லை. அவர்களோ வெளிநாட்டவர்கள்.  அவர்களுடைய கடப்பிதழை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள்.  அவர்களை அப்படியே முடக்கிவிடுகிறீர்கள்.  அவர்களை உங்களுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள்.  அவர்கள் சோம்பேறிகள் என்று முத்திரையும் குத்திவிடுகிறீர்கள். உடம்பில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.

இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை என்றாலும்  அதைத்தான் விரும்பி செய்கிறீர்கள். காரணம் அவர்கள் உங்கள் அடிமைகள்  என்கிற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுகிறீர்கள்.  ஆனால் நேரம் எப்போதும் உங்களுக்குச் சாதகமாக இருக்கப்போவதில்லை.  மாட்டிகொண்டால் உங்கள் பாடு அதோபாடு தான்!

அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் எல்லாம் இந்த நவீன முதலாளிகளைக்  கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் பணிப்பெண்களே வேண்டாம் என்கிற அளவுக்குத் தண்டிக்க வேண்டும்.