Monday, 4 November 2024

அலட்சியம் வேண்டாம்!

நாய்களை அலட்சியமாகப் பார்ப்பவர்கள் உண்டு. அதே சமயத்தில் நாய்களைக் குழந்தைகளாகப் பார்ப்பவர்களும் உண்டு. ஏன்? நாய்களை 'நாய்' என்று சொன்னாலும் கோபப்படுகிறவர்களும் உண்டு.

உண்மையில் நாய்கள் ஓர் அற்புதமான பிராணி. நன்றிக்கு உதாரணம் நாய் தான்.  சமீபத்தில் காலஞ்சென்ற இந்திய தொழிலதிபர் ரத்தன் டாட்டா,    தான் வளர்த்த நாய்க்குக் கூட அதன் வளர்ப்புக்கென ஒரு தொகையை தனது உயிலில்  ஒதுக்கியிருக்கிறார்.

ஆனால் நாய்களின் அருமைத் தெரியாத சில எருமைகள் நாய்களை எப்படியெல்லாம் கொன்று குவிக்கின்றனர் என் அறியும் போது நம்மை அறியாமல் கண்ணீர் வழிகிறது.

அவைகள் தெரு நாய்கள் என்பது நமக்குப் புரிகிறது. அவைகளையும் ஓர் உயிர் என்று தான் பார்க்க வேண்டும். அவைகளைச் சுட்டுத்தள்ளினால்  அப்போதே அவைகளின் உயிர் போய்விடும். வேறு வகைகளில்  அவைகளைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதும், சாகடிப்பதும், அடித்துக் கொல்லுவதும்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வன்முறையைக் கையாள்பவர்கள் கொலைகாரர்களாகத்தான்  நாம் நினைக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய ஒரு நிகழ்வில் நாய்களைக் கொன்று,  அவைகளைப் புதைக்கும் போது,  உயிரோடு  அதன் குட்டிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காமல்,  புதைத்திருக்கின்றனர்.  அவர்கள் அரசாங்க ஊழியர்கள்.  தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள்.  ஆனால் உயிரோடு உள்ள  ஜீவன்களைப் புதைப்பதற்கு எப்படி மனம் வந்தது என்பது நமக்குப் புரியவில்லை.

தெருநாய்களைக் கொல்லுவதற்கு இது தான் வழியா  வேறு வழிகளே இல்லையா என்பது நமக்கும் தெரியவில்லை.  மற்ற நாடுகள் இதனை எப்படிக் கையாள்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனாலும்  சரியான,  நியாயமான வழிகள் இருக்கத்தான் செய்யும்.

எல்லாமே உயிர்கள் தாம். தெருநாய்கள் எப்படி உருவாகின்றன? இன்று கொஞ்சி கொஞ்சி வளர்ப்பவர்கள்  கொஞ்சம் நாள்களில் அந்த நாய்களைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள்.  பாவம்! அந்த நாய்கள் தெருவுக்கு வந்ததும் பசி பட்டினியால் வாடுகின்றன.

நாய்கள் தானே  என்கிற அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பொறுப்போடு  பார்த்துக் கொள்ளுங்கள்.  இதைத்தவிர வேறு என்ன சொல்ல?  அரசாங்க ஊழியர்களே கொஞ்சம் மனிதாபிமானத்தோடு  நடந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment