Wednesday, 6 November 2024

அட! நாடாளுமன்றத்திலுமா?

நாட்டின் நிலைமையைப் பாருங்கள். எத்தனையோ உணவகங்கள் எங்கெங்கோ மூடப்படுகின்றன  என்பதை நாம் படித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும், கண்முன்னே பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆனால் நாட்டை ஆளும் நாடாளுமன்றத்திலேயே இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று நாம் நினைத்துப் பார்த்ததில்லை.  நாடாளுமன்றத்தில்  கூட இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் கற்பனைக் கூட செய்தததில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள பணியாளர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இப்படித்தான்  உணவுகளை உட்கொள்வார்களோ என அறியும் போது நமக்கே அதிர்ச்சியைத் தருகிறது!  நாடாளுமன்றம் என்பது நாட்டை ஆளுகின்ற  அதிகாரப்பீடம். அது எப்படி இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை.  அங்கு உள்ள ஓர் உணவகம் சுத்தமின்றி, சுகாதாரமின்றி இருப்பது வெட்கக்கேடான, கேவலமான ஒரு விஷயம்.

அப்படியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சுத்தத்தையோ, சுகாதாரத்தைப் பற்றியோ கவலை இல்லாதவர்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  நாட்டில் இலஞ்ச ஊழலை ஒழித்து, நாட்டை சுத்தம் பண்ண வந்தவர்கள் என்று தான் நாம் இவர்களைப்பற்றி நினைத்து வந்தோம்.  ஆனால் தங்கள் கண்முன்னே சுத்தமற்ற, சுகாதாரமற்ற உணவுகளை உண்பவர்களான இவர்கள் எங்கே நாட்டில் உள்ள அசுத்தங்களை ஒழிக்க முடியும்?  

நாட்டில் நடக்கும் அசிங்கங்களைப் பார்க்கும் போது  இவர்கள் அது பற்றியெல்லாம் கவலைப்படுவார்கள், தீர்த்து வைப்பார்கள்  என்கிற  எண்ணமே நமக்கு  ஏற்பட வாய்ப்பில்லை.   அவர்களைச் சுற்றி நடக்கும் அசுத்தங்களையே  அவ்ர்கள்  கண்டுகொள்ளவில்லை  என்றால்  நாட்டில் நடக்கும் அசுத்தங்களையா அவர்கள் கண்டுகொள்ளப் போகிறார்கள்! 

என்ன தான் சொன்னாலும் நம்மால் சமாதானம் அடைய முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலை  சுகாதாரமற்ற சூழலில் இயங்குகிறது என்றால்  அதனை நடத்துபவர் யாராக இருக்கும்?  அவரும் ஏதோ ஒரு வகையில் நாடாளுமன்ற உறவுகளாகத்தானே இருக்க வேண்டும்?   வெளியே பல குறைபாடுகள் இருக்கலாம்.  ஆனால் அதிகாரபீடத்தில்  அது இருக்கக் கூடாது.

நமக்கு வருத்தம் தானே தவிர அதைத்தான் இங்குப் பதிவு செய்கிறோம். எக்கேடு கெட்டாவது போங்கள்!

No comments:

Post a Comment