தமிழ் சினிமாவின் முதன்மை கதாநாயகனாக விளங்கும் கமல்ஹாசன் "இனி என்னை உலக நாயகன்" என்று அழைக்க வேண்டாம் என தனது X தளத்தில் அறிவித்திருக்கிறார்.
நம்மைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இது போன்ற பட்டங்களைப் பெரும்பாலானோர் விரும்பத்தான் செய்கின்றனர். இன்றும் இது போன்ற பட்டங்களுக்கு மரியாதை இருக்கத்தான் செய்கின்றது.
ஏற்கனவே 'தல' இனி எனக்கு வேண்டாம் என்று அஜித்குமார் கூறிவிட்டார். இன்னும் பல கதாநாயகர்களுக்குப் பலவிதமான பட்டங்கள். அது தேவையோ இல்லையோ, பொருத்தமானதோ பொருத்தமற்றதோ ஆனாலும் அவர்கள் அந்தப் பட்டங்களை விடத் தயாராக இல்லை. அவர்களிடம் கேட்டால் இரசிகர்கள் மேல் குற்றம் சுமத்துவார்கள். "நாங்கள் விரும்பவில்லை, இரசிகர்கள் தான் அதனைப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறுவதும் உண்டு.
நமது கமல்ஹாசனை எடுத்துக் கொண்டால் "உலக நாயகன்" என்பது அவருக்குப் பொறுத்தம் தான். நடிப்பில் பல எல்லைகளைத் தொட்டவர். அவரை மிஞ்ச ஆளில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவருக்கு நிகர் அவர் மட்டும் தான். இப்படி ஒரு முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது நமக்குப் புரியவில்லை. ஆனாலும் அவரின் முடிவை நாம் மதிக்கிறோம். இரசிகர்களும் மதிக்க வேண்டும்.
கமல் அரசியலிலும் இருக்கிறார். இது போன்ற பட்டங்கள் அரசியலில் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற சாத்தியமும் உண்டு. காரணம் உலக நாயகன் என்கிற போது அது சினிமா சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதனை எதில் சேர்ப்பது என்பதும் புரியவில்லை. கொஞ்சம் சிக்கலும் உண்டு. அவர் அரசியலில் இல்லாவிட்டால் ஒரு வேளை இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார்.
ஆனாலும் அவரின் வேண்டுகோளை நாம் மதிப்போம். இனி அவர் கமல் அல்லது கமல்ஹாசனாக இருக்கட்டும்.
No comments:
Post a Comment