Saturday, 2 November 2024

ஆஸ்ரமங்களா இவை?

இப்போது நாடெங்கிலும் பலவித ஆஸ்ரமங்கள். தேவை தான் என்பதில்  ஐயமில்லை. ஆனால் நல்ல நோக்கத்தோடு  அவைகள் செயல்படும் போது நமக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.  பணத்தை  நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆஸ்ரமங்களும் உள்ளன.  ஒன்றிண்டு அல்ல பல உள்ளன. எப்படி தான் போனாலும் கடைசியில் பணம் தான்!

ஆகக் கடைசியாக கெடாவில்  உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கான ஓர் ஆஸ்ரமத்தில் நடந்தவைகளைப் பார்த்திருப்போம். வயதானவர்கள், மனநலம் குன்றியவர்கள்  நடக்க இயலாதவர்கள் என்றும் பாராமல்  அவர்களைச் சங்கலியால்  கட்டிப்போட்டும் அடித்தும் துன்புறுத்தியும் வந்திருக்கின்றனர்.  இதனைக் கண்காணிக்க வேண்டியவர்கள்  கண்ணை மூடிக்கொண்டு காணிக்கையை மட்டும் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

ஆனால் அதன் இறுதிக் காட்சிகள் தான் நம்மைப் பதற வைக்கின்றது.   அதனை நடத்தி வந்தவன்  அந்த ஆஸ்ரமத்தில் இருந்த 21 பேரையும் வீதியில் விட்டுவிட்டு ஓடிப்போனான்!  எப்படியோ நல்ல உள்ளங்கள் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து அந்த முதியவர்களை நிம்மதியான ஒரு இடத்தில் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

ஆஸ்ரமங்கள் நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல.  கொஞ்சமாவது இரக்கம் வேண்டும். பணம் தான் நோக்கம் என்றால்  இரக்கம் எல்லாம் பறந்து போகும்!

அதனால் தான் சீனர்கள் பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்கின்றனர். ஏதும் குறைகள் இருந்தால்  அவர்களை நாம் தட்டிக் கேட்கலாம். அவர்கள் குறைகள் இல்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். சீனர்கள் முதியோர் இல்லங்களைக் கட்டணங்கள் வாங்கிக் கொண்டு நடாத்துகின்றனர்.  அதனைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் இந்தியர்கள் தொண்டு என்கிற  பெயரில் இலவசமாக செய்கிறோம் என்கிற பெயரில்  பணத்தை நோக்கி தான் பயணம் செய்கின்றனர். நிறைய உதவிகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களின் குடும்பமே ஆஸ்ரமத்தை நடத்துகின்றனர். இதெல்லாம் நமக்குக் கிடைக்கும் கசப்பான அனுபவங்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.  தேவையான உணவுகளையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை. 

இது தான் இன்றைய ஆஸ்ரமங்களின் நிலை! நல்லவர்கள் நடத்தும் ஆஸ்ரமங்களை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment