sசமீபகாலமாக சுங்கை சிப்புட், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கேசவன் பற்றியான செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன.
இத்தனை நாள்கள் இவர் எங்கிருந்தார், என்ன செய்தார் என்கிற சத்தமே இல்லாமல் திடிரென "இவருக்கு என்ன ஆயிற்று?" என்று அனைவரும் கேள்வி கேட்கின்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால் நாடாளுமன்றத்தில் இவர் பேசிய பேச்சு அனைவரின் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் போதுமான நிதி இந்தியர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது பொதுவான கருத்து. அதனால் நிதியை இன்னும் கொஞ்சம் அதிகரியுங்கள் என்று நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் பலர் குரல் எழுப்புகின்றனர்.
ஆனால் நம் கேசவன் அவர்களோ அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இப்போதே பதியம் போடுகிற வேலையில் இறங்கிவிட்டார் என்பது நமக்குப் புரிகிறது. அதாவது "கோடரிக்காம்பு" என்பார்களே அந்த வேலை! என்ன தான் சொல்லுகிறார்? "போதுமான நிதி இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அவர் சொல்ல வருவது. அதற்காக பிரதமர் அன்வாரை அவர் பாராட்டியுமிருக்கிறார்.
இந்தியர்களின் பிரச்சனையை இவர் அறியவில்லை. மாண்புமிகு பிரபாகரனே மித்ராவுக்குப் போதுமான நிதி இல்லையென்று கூறியிருக்கிறார். இன்னும் பலரும் இதே கருத்தையே சொல்லியிருக்கின்றனர். ஆனால் இவரோ நாடாளுமன்றத்தில் சவால் விடுகிறார்.
இவரைப் போன்ற கோடரிக்காம்புகளை நாம் என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். நமக்குத் தெரிந்ததெல்லாம் அடுத்த தேர்தல்வரைக் காத்திருக்க வேண்டும். அதைத்தான் செய்ய முடியும். இவருக்கு இந்தியர்களின் நிலை தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருக்கலாம். அப்படியும் இருக்க முடியவில்லை. ஆனால் பிரதமரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்!
வெறும் அரசியல் பேசுவதை கேசவன் நிறுத்த வேண்டும் என்பது தான் நாம் அவரைக் கேட்டுக்கொள்வது. பார்ப்போம்!
No comments:
Post a Comment