Thursday, 13 April 2017

கேள்வி-பதில் (43)


கேள்வி

தமிழ் நாட்டில் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியின்  ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டு விட்டதாமே!

பதில்

உண்மையே! தமிழிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். குரங்கு கையில்; பூமாலைக் கிடைத்தால் என்ன ஆகும்? அந்தக் கதை தான் தமிழ் நாட்டில். தமிழ் நாடு என்னும் பூமாலை குரங்குகளின் கையில் அகப்பட்டுக் கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது!

இப்போது மட்டும் என்று சொல்லிவிட முடியாது.  கடந்த 50 ஆண்டளவாக தமிழகம் இப்படித்தான் சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும் கடைசியாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டவர்கள் அரசியவாதிகள்!

அவர்கள் கை படாத இடமே இல்லை!  அவர்களுக்கு அதரவு இல்லை என்று தெரிந்தால் உடனே களத்தில் இறங்கிவிடுவார்கல்! ரௌடிகள் அவர்களது கையாட்கள்! அத்தோடு காவல்துறையும் அவர்களது பலம்! பொது மக்கள் நிலைமை அவலம்!

இன்றைய ஊடகங்கள் தமிழ் நாட்டின் உண்மை நிலையை வெளியே கொண்டு வருவதில்லை என்னும் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதுண்டு. ஆனால் உண்மை நிலை என்ன? அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து ஊடகங்களும் செயல்படுகின்றன! தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி,  செய்தித்தாள்களாக  இருந்தாலும் சரி அரசியல்வாதிகளுக்கு எதிராக செயல்பட யாருக்கும் துணிவில்லை!  கோடிக்கணக்கில் பணம் போட்டுத் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியை ஒரு நிமிடத்தில் முடக்கிவிடுவான் ஓரு முட்டாள் அரசியல்வாதி!!

அது தான் நடந்தது தமிழ் நாட்டில்!  ஆர்கே நகரில் போட்டியிடும் .பெரும் ஊழல்வாதியான தினகரனைப் பற்றிய செய்திகள் - வெற்றிபெற மாட்டார் என தொடர்ந்து செய்திகள் வெள்யிடப்பட்டதால் அப்படி ஒரு நிலைமை புதிய தலைமுறைக்கு ஏற்பட்டது. அது  எல்லா ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால் என்று அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்; புரியும்.

இது போன்ற அச்சுறுத்தல்களாலேயே ஊடகங்கள் துணிந்து மக்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டு வர முடியவில்லை! அப்படித் துணிந்து குரல் கொடுத்தால் குண்டர் கும்பல்களை வைத்து அவர்களுடைய அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படும்!

இன்றைய நிலையில் தமிழகத்தில் ஏகப்பட்டப் பிரச்சனைகள். ஆனால் ஒன்றுமே நடவாதது போல எல்லாம் வாய்பொத்தி, மௌனியாக செத்த பிணங்கள் போல் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்!

ஜல்லிக்கட்டு ஒரு முடிவுக்கு வந்தால், நெடுவாசல் இன்னொரு பிரச்சனை. காவேரி நீர் பிரச்சனைக்கு ஒரு முடிவும் இல்லை. கேரளாவோடு முல்லையாறு பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.  மீனவர் பிரச்சனை தமிழ் நாட்டுப் பிரச்சனை! அவன் இந்தியன் அல்ல என்கிற விவாதம் தொடர்கிறது! ஆந்திரவோ ஏழைத் தமிழன் திருட வந்தான் என்று சுட்டுத் தள்ளுகிறது!

ஆனால் பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை! தமிழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதாகக் காட்டிக் கொள்ளுகின்றன.இவைகளுக்குப் பதிலாக சினிமா செய்திகளைப் போட்டு தமிழர்களைச் சினிமா பைத்தியங்களாக ஆக்குகின்றன!

புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு இது ஒரு பயமுறுத்தல் நாடகம்!  இந்தப் பயமுறுத்தலை அனைத்து ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு!  அது சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அடக்கி வாசிக்கிறார்கள்!

இப்போது தமிழகம் தமிழன் என்கிற உணர்வு இல்லாதவர்களிடம் அகப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழனின் சரித்திரம் என்பது ஏதோ தீடீரென நேற்று முளைத்த காளான் அல்ல. எந்த ஓர் அரசியல்வாதியும் தமிழனை அவன் மொழியை அவன் கலாச்சாரத்தை, அவன் வளத்தை அப்படியெல்லாம் அழித்துவிட முடியாது. தமிழன் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவன்.

இதுவும் கடந்து போகும் என்பது போல இன்றையச் சூழலும் கடந்து போகும்.!

தமிழன் தலை நிமிர்வான்! எந்தத் தங்குத் தடையுமில்லாமல் தமிழன் தனது ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றுவான் என்பதில் ஐயமில்லை!

புதிய தலைமுறை மீண்டும் தனது மகத்தான பணியை நிறைவேற்றும் என எதிர்பார்ப்போம்!

ஆமாம்! தமிழ் நாட்டைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டோம்! நமது  நாட்டின் நிலைமை என்ன? இங்கும் அதே நிலை தான்! ஐயம் வேண்டாம்!


No comments:

Post a Comment