Saturday 22 April 2017

ஒரு கண் மருத்துவரிடம் ஒரு பத்து நிமிடங்கள்!


அவ்வளவு தான்! ஒரு பத்து நிமிடங்கள் கூட இருக்காது என்று தான் சொல்ல வேண்டும். அவர் என்ன நிற்கக் கூட நேரம் இல்லாதவரா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!  எங்கோ வெளியே போயிருந்தார். அவருக்காக அரை மணி நேரத்திற்கு மேல் நான் காத்திருந்தேன். . அதன் பின்னர் தான் அவர் வந்தார். ஏதோ சுவராஸ்யமே இல்லாதவர் போல காணப்பட்டார்.

என்னை உள்ளே வரச் சொன்னார். போனேன். என்னைப் பற்றிய முழு விபரங்களும் அவரிடம் இருந்தன.ஆனாலும் அவர் எதனையும் படித்ததாக எனக்குத் தோன்றவில்லை. எனது பெயரை மட்டுமே கவனித்தார். 

முதலில் இரு கண்களையும் அவர் முன் இருந்த அந்த பிரம்மாண்ட இயந்திரம் மூலம் படம் எடுத்தார். 

"உங்களுக்கு லேசாக  கண்களில் 'காட்டரேக்' (கண்படலம்) இருப்பதைக்  காட்டுகிறது!" என்றார்!

"சரி!" தலையாட்டினேன்!

மேலும் இயந்திரத்தின் அருகே எனது கண்களைக் கொண்டு சென்று ஒவ்வொரு கண்ணையும் படம் எடுத்தார். மிகவு சக்தி வாய்ந்த ஒளி. இதற்கு முன் இந்த அனுபவம் இல்லை.

உடனடியாக சட்டுபுட்டென்று அனைத்தையும்  அணைத்துவிட்டு:

"சரி! நீங்கள் போகலாம்! எல்லாம் நல்லாயிருக்கு! அவ்வளவு தான்!" என்று சொல்லிவிட்டார்!

"மீண்டும் எப்போது வரலாம்?" இது நான். 

"வர வேண்டாம்! அவசியமில்லை!" 

"மருந்து ஏதேனும் கொடுப்பீர்களா?"

"இல்லை! மருந்து இங்கு இல்லை!"

அவர் என்னைக் கிளப்பிவிடுவதிலேயே இருந்தார்!  ரொம்பவும் அவசரப்பட்டார்!

வேறு வழியில்லை!  நானும் மூட்டையைக் கட்டினேன்!

எல்லாமே ஒரு ஐந்து நிமிடத்தில் முடிந்திருக்கும்! இதற்கு நான் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன்! 

எனக்கு ஏற்கனவே இது அரசாங்க மருத்துவமனையில் செய்யப்பட்ட  ஒர் ஏற்பாடு. நீண்ட நாட்கள் நான் எனது கண்களை சரி பார்க்கவில்லை. நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கான வைத்தியம்  பார்க்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. அதன்படி தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இது போன்ற அரசாங்க கிளினிக்குகள் பல இடங்களில்  சரியாகத்தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது ஏனோ அரசாங்கம் தவறான சில முடிவுகளை எடுப்பதாகத் தெரிகிறது. இப்போது நான் மேலே சொன்ன கிளினிக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மருத்துவராகப் பணிபுரிபவர்கள் அனைவருமே சிறு வயது பெண் பிள்ளைகளாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே  ஆங்கிலம் அறியாதவர்கள்! அது கூட பரவாயில்லை. அவர்களின் தொழிலில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளவர்களா என்பதே ஐயத்திற்குரியதாக இருக்கிறது! நோயாளிகளைப் பார்த்தாலே முகம் சுளிக்கிறார்கள்!. அவ்வளவு வேலையாம்!

இந்த மருத்துவர்களைப் பார்க்கின்ற போது நமக்கு ஏற்படுவதெல்லாம் இவர்கள் எப்படி .....மருத்துவர் ....ஆனார்கள் என்னும் எண்ணம் தான்! உண்மையில் இவர்கள் மருத்துவ்ர்களா அல்லது மருத்துவ உதவியாள்ர்களா? ஆனால் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்ப்புக்களோ மிகப் பெரிது! இனிப்பு நீர், இருதய நோயாளிகள், கண்கள் - இது போன்ற - அனைத்து நோயாளிகளையும் இவர்கள் பார்க்கின்றனர். ஆனால் அந்தத் தகுதிகள் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை! நோயாளிகளைத் தொட்டுப் பார்ப்பதற்குக் கூட தகுதி இல்லாதவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

அரசாங்கம் மாரா கல்லூரி மாணவர்களுக்குக் குறுகிய கால மருத்துவப்  பயற்சிகள் கொடுத்து இவர்களை மருத்துவ்ர்களக  அனுப்புகிறதோ என்னும் ஒரு சந்தேகமும் நமக்கு வருகிறது! வெளி நாடுகளில் நிறையவே இந்திய, சீன மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.அவர்களுக்குப் போட்டியாக இவர்கள் உருவாக்கப் படுகிறார்களோ என்னும் எண்ணமே நமக்கு ஏற்படுகிறது!

ஒரு கண் மருத்துவரின் நடவடிக்கையால் இப்படியெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறது!

சமீபத்தில் நமது பிரதமர் கூட நமது நாட்டில் மருத்துவர்கள் நிறைந்து விட்டதாகக் கூறியிருந்தார். ஒரு வேளை இவர்களை  மனதில் வைத்துத் தான்  அப்படிக் கூறினாரோ!



No comments:

Post a Comment