Thursday 13 April 2017

மத போதகர் என்ன ஆனார்?


கிறிஸ்துவ மத போதகர், ரேமன் கோ என்ன ஆனார்?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் (13-2-2017)  மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில், கிளானா ஜெயாவில் அவர் கடத்தப்பட்டார். அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தீடீரென அவரைச் சுற்றிக்  கார்களும், மோட்டார் சைக்கள்களும் சூழ்ந்து கொண்டன. காரில் இருந்தபடியே வாகனங்கள், மோட்டார் சைக்கள்கள் புடைசூழ அவர் கடத்தப்பட்டார்!

அப்படித்தான் இணையத்தில வலம் வந்த படக்காட்சிகள் காட்டுகின்றன!   அது ஒரு சாதாரண கடத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்தக் கடத்தல்களுக்கு முன்னதாக அவர் பல நாள்கள் கண்காணிக்கப் பட்டிருக்கின்றார். மிகவும் கைதேர்ந்த, மிகவும் நிபுணுத்துவம் வாய்ந்த ஒரு பயங்கரவாதக் கும்பலின் நடவடிக்கையாகவே அந்தப் படக்காட்சிகள் நமக்கு நினைவூட்டுகின்றன! ஏதோ ஒரு பெரும்புள்ளியை - ஒரு பிரதமரை, ஒரு பெரும் தலைவரை - கடத்துவதற்கு  எப்படி பயங்கரவாதக் கும்பல்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றனவோ  அதே முறையை இந்தச் சாதாரண மதபோதகருக்கும் செயல்படுத்தப்பட்டிருப்பது  தான் இதில் வேடிக்கை!

ஆனால் அந்தப் படக்காட்சிகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை! காவல்துறை எதனையும் இதுவரை உறுதிப்படுத்தவுமில்லை! எல்லாம் "பார்க்கிறோம்" என்னும் தலையசப்பே காவல்துறையின் தற்போதைய நிலைமை!

நமது நாட்டில் இது போன்ற கடத்தல் வேலைகள் பல காலமாகவே நடந்தேறி வருகின்றன. சமீபத்தில் கூட சமூக ஆர்வலர் பீட்டர் சோங் காணாமல் போனார். அவர் என்ன  ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. பேருந்து ஒன்றில் அவர் தாய்லாந்து போனதாக காவல்துறை கூறுகின்றது.  உண்மை இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை!

இன்னொரு கிறிஸ்துவ மத போதக தம்பதியினரான ஜோஷுவாவும் அவரது மனைவியும் கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனார்கள். கடைசியாக அவர்கள் கோலாலம்பூரில் காணப்பட்டார்கள். அதுவே கடைசி! இன்னும் எந்தத் தகவலும் இல்லை!

இன்னொரு இஸ்லாமிய சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் என்பவரும் கடந்த நவம்பர் மாதம் பெர்லீஸ் மாநிலத்தில் இருந்து காணாமல் போனார். அவர் இஸ்லாமிய  ஷியா பிரிவினை மலேசியாவில் பரப்புவதற்கான வேலைகளைச் செய்வதாக அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு. ஷியா பிரிவு என்பது அரசாங்கத்தினால் ஏற்கப்படாத ஒன்று!

பெரும்பாலும் சமயம் சம்பந்தமான சர்ச்சகளில் சம்பந்தப்படுவோர் காணாமல் போனால் அவர்களைப் கண்டு பிடிப்பது என்பது காவல்துறையால் இயலாது  என்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அவர்கள் ஒதுக்கப்பட்டு வேறு யாராலோ இயக்கப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது! ஒரு முன்னாள் இந்துவான பத்மனாதன் என்னும் முகமது  ரிடசுவான் அப்துல்லாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க  முடியாமல் காவல்துறை திணறுகிறது என்று சொல்லப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!

எது எப்படி இருப்பினும் கிறிஸ்துவ மதபோதகர்கள் இப்படிக் காணாமல் போவது என்பது நல்லதல்ல. அவர்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்  என்றால் அவர்கள் சட்டத்திற்கு முன் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட வேண்டும்.

இல்லையேல் எல்லாக் காலத்திலும் அரசாங்கத்தையே மக்கள் குறை கூற வேண்டி வரும்! இதுவும் நல்லதல்ல!



No comments:

Post a Comment