Friday 28 April 2017

கேள்வி - பதில் (44)


கேள்வி

தமிழ் நாட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நிரந்திர ஆட்சி அமையுமா?


பதில்

நிரந்தர ஆட்சி அமைய வாய்ப்பிருந்தாலும் இரு அணிகளுக்குள்ளே இருக்கும் பூசல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை! தீர்வு காணப்பட்டாலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க விடுமா என்பதும் கேள்விக் குறியே!

முடிந்தவரை அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகட்டும்; நாம்  வெளியே இருந்தே வேடிக்கப் பார்ப்போம் என்பது தான் பா.ஜ.கா.வின் நிலை! அவர்களுக்குள் தீர்வு காணாததால் நாங்கள் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தோம் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பின்னர் அறிக்கை விடுவார்கள்!

இந்த இரு அணிகளுக்குள்ளும் யார் பதவிக்கு வந்தாலும் அதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பயனும் இருக்காது என்பதே எனது அபிப்பிராயம்!

பன்னீர்செல்வம்,  தான் அம்மா ஆட்சியைத்தான் கொண்டு வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்! அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே அறியும்! அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பதை நாடே அறியும்! கோடி கோடியாக ஊழல் செய்து குற்றவாளி என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது! இன்று அவர் உயிரோடு இருந்தால் சசிகலாவிற்குப் பதிலாக அவர் இன்று பார்பன அக்ராகர சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்!

இப்படி ஒரு ஊழல்வாதியை முன்னுதாரணமாகக் கொண்டு தான் நான் செயல்படுவேன் என்றால் என்ன அர்த்தம்? அதன்படி அவர் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். காவேரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை, கர்னாடக மாநிலம் தண்ணிரைத் தடுப்பதற்காக அணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றது.. அந்த அணைகள் கட்டுவதற்காக தமிழ் நாட்டில் இருந்து தான் மணல் கொள்ளயடிக்கப் படுகின்றது! அதற்கு இப்போதும் கர்நாடகாவிற்கு மணல் அனுப்பிக் கொண்டிருப்பது அவர் குடும்பமும் ஒன்று!  அம்மா செய்ததையே இவரும் செய்கிறார்! எப்படி காவேரி பிரச்சனைத் தீரும்!

எடப்பாடி பழனிசாமி மன்னார்குடி மாஃபியா குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர்! தமிழ் நாட்டையே சுரண்டியவர்கள். தமிழ் நாட்டு மணலை வைத்தே பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள்! சசிகலாவின் அக்காள் மகனான தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பவர்! இடைத் தேர்தலில் தினகரன் தனது சொத்து மதிப்பு ருபாய் 70,000 இலட்சம் என்று சொன்னவர். ஆனால் இரட்டை இலை சின்னத்திற்காக ருபாய் 50 கோடி இலஞ்சம் கொடுத்தவர்.

இவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது? இவர்கள் பதவிக்கு வருவதன் மூலம் வருங்காலங்களில் தமிழ் நாட்டு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது் இப்போதே இது தெரிய ஆரம்பித்து விட்டது!

ஜனாதிபதி ஆட்சி வருவதன் மூலம் என்ன நடக்கும் என்பதும் புரியவில்லை!  நடுவண் அரசு தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சனை ஆகட்டும், மீனவர் பிரச்சனை ஆகட்டும், நெடுவாசல் பிரச்சனை ஆகட்டும் - எதுவுமே தமிழகத்தின் நலனுக்குச் சாதகமாக இல்லை.

ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம்! நல்லதே நடக்கும் என நம்புவோம்! நல்லாட்சி மலரும் என நம்புவோம்! நான்கு ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தலை நிமிர்வான்! தமிழகமும் தலை நிமிரும்!

No comments:

Post a Comment