Sunday 16 April 2017

ஒரு மருத்துவமனை அனுபவம்!


மருத்துவமனைக்கு நான் போவது என்பது கடந்த ஐந்து ஆறு வருடங்களாகத்தான். அதற்கு முன்பு நான் அந்தப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லை! அப்படிப் போகும்படியாக பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அப்படிப் போகம்படியாக பெரிதாக ஒன்று வந்து போகும்படியாகி விட்டது!

அதனால் மருத்துவமனைக்குக் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக இரண்டு முறையாவது போய் வருவது வழக்கமாகி விட்டது. இப்போது மருத்துவமனைகளும் பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்குவதால் அடிக்கடி மருந்து மாத்திரைகளுக்காக போய் வருகிற நிலைமை.

நான் இதுவரை சந்தித்த மருத்துவர்கள் பலர். இந்தியர், சீனர், மலாய்க்காரர், அரேபியர்; வேறு இனத்தவர் யாரும் இல்லை. இவர்களெல்லாம் நான் வழக்கமாக நான் போகும் மருத்துவமனைகளில் பணியில் இருந்தவர்கள்.

சமீபத்தில் இரண்டு முறை வழக்கம் போல நான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்,  மருத்துவமனை என்பதைவிட அரசாங்கம் ஆங்காங்கே கட்டியிருக்கும் கிளினிக்குகள். நல்ல தரமானவைகள் தாம். ஏறக்குறைய ஒரு கால்வாசி மருத்துவமனை என்று சொல்லலாம்.

போன முறை சென்ற போது ஒரு மலாய்ப் பெண் மருத்துவர். மிகவும் இளம் வயது. புதிய வரவாக இருக்கலாம்.  அனுபவக் குறைவு. அதனால் என்ன? நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை!  பொதுவாக மலாய்ப் பெண்கள் ஆங்கிலம் பேசுவதில் சிரமப்படுவார்கள் அவர் மலாய் மொழியில் பேசினார்.. என்னனவோ சொன்னார். நான் தலையட்டுவதைவிட பேசப்போவது ஒன்றுமில்லை!

எல்லாம் சரி தான். ஒன்றைக் கவனித்தேன். இதற்கு முன்னர் நான் பார்த்த மருத்துவர்கள் எல்லாம் ஒரு நோயாளியின் திருப்திக்காகவாவது ஸ்டெதஸ்க்கோப்   வைத்து இங்கும் அங்கும் வைத்து 'அது நல்லாயிருக்கு! இது நல்லாயிருக்கு! பரவாயில்லை!" இப்படி எதையாவது சொல்லிவைப்பார்கள்! இவர் அந்த முயற்சியியையும் செய்யவில்லை!  இருந்தாலும் ஒரு மருத்துவருக்கு தெரியாதா தான் என்ன செய்கிறோம் என்று?

நான் போன வாரம்  மருத்துவமனைக்குச் சென்ற போது - இந்த முறை இன்னொரு மலாய் இளம் பெண் அதே புதிய வரவு. ஆனால் இவர் "நம்ம" நிறம்.  ஆங்கிலம் பேசும் திறன்  இருக்கிறது என்றால் தமிழ் முஸ்லிம் பெண் தானே! அதனாலென்ன! மீண்டும் அதே நடைமுறை. நோயாளி மேல் கைதொட்டுப்  பேசுகின்ற பழக்கம் இவருக்கும் இல்லை!

என்னிடம் ஒரு கேள்வி உண்டு. இப்போது புதிதாக வெளியாகும் மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடக்கூடாது என்பதாக ஏதேனும் போதிக்கப்படுகிறதா? தாதியர்கள் எந்த வேறு பாடுமின்றி நோயாளிகளை தொட்டுத் தானே சிகிச்சைச் செய்கின்றனர்!

 அதென்ன! தாதியர்களுக்கு ஒரு சட்டம் மருத்துவர்களுக்கு ஒரு சட்டம்?  மற்ற மருத்துவர்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்படாத  போது புதிதாக வரும் இந்த இளம் மருத்துவர்களுக்கும் மட்டும் எப்படி தொற்று நோய்கள் வரும்?  கல்வி முறையில் தான் கோளாறோ! நானறியேன்!

No comments:

Post a Comment