Thursday 27 April 2017

"குறை சொல்லாதீர்கள்..!"

 பிரதமர் நஜிப், தமிழில் பேசி, அதிரடியாக அறிவித்த -  இந்தியர்களின் வளர்ச்சிக்காக - ஐம்பது கோடி வெள்ளி பெருந்திட்டம் - இன்று முதல் அமுலுக்கு வந்துவிட்டதாக நாம் நம்பலாம். ம.இ.கா.வினர் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன நாம் நம்புவோம்!  ம.இ.கா. தலைவர் தான் இந்தப் பெருந்திட்டம் செயல்படுவதை உறுதிப்படுத்த, செயல்படுத்துவதற்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே ம.இ.கா.வின் இன்னொரு தலைவர் இந்தப் பெருந்திட்டத்தைக் குறை சொல்லுவது நிறுத்துங்கள் என்கிறார்! அவர் சொன்னது தவறு. யாரும் குறை சொல்லவில்லை. இதனை,  ம.இ.கா.வினர் உட்பட, அனைவரும் கேலியாகப் பார்க்கிறர்கள்! அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள்  ம.இ.கா.வினர் தான்!

ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை அதனையே பேசி பேசி, அதனையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் என்ன வாழ்த்தவா செய்வார்கள்? சாமிவேலு காலத்திலிருந்து இதனையே தானே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

சரி! அதனை விடுவோம்! இந்த முறை பிரதமர் அறிவித்தது அனைத்தும் நிறைவேறும் என நம்புவோம். அவைகளைப் பெறும் தகுதியும் உங்களுக்கு இருப்பதாகவும் நாம் நம்புவோம்.

இந்தப் பெருந்திட்டம் பத்து ஆண்டு நீண்ட திட்டம். இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் திட்டங்கள் எல்லாம் உடனடியாக அமலுக்கு வருவதால் நாமும் உடனடியாகப் பிரச்சனைக்கு வருவோம்.

இன்றைய நிலையில் ஏறக்குறைய 25,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக இருப்பதாக அறிகிறோம். அதே சமயத்தில் உள்துறை அமைச்சில் சுமார் 3,000 குடியுரிமைக்கான மனுக்கள் உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் சரிபார்க்கபட்டு அவரின் கையொப்பத்திற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக. கேட்பாரின்றி அப்படியே போட்டு வைக்கப் பட்டிருக்கின்றன! இவைகள் வெளியாக்கப்பட வேண்டும். ஓர் அமைச்சர் தனது கடைமகளைச் செய்ய விடாமல் எது தடுக்கிறது என்பதையெல்லாம் பற்றி நமக்குக் கவலை இல்லை. நமது உரிமைகள் அங்கே குப்பைகளாகக் கிடக்கின்றன!

இதற்காக நாம் பத்து ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த நூறு நாட்களில், மீண்டும் சொல்லுகிறேன் அடுத்து 100 நாட்களில், இந்த 3000 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுதாரரிடம் போய்ச் சேர வேண்டும். அப்போது தான் உங்களின் பெருந்திட்டம் வேலைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது என நாங்கள் நம்புவோம்! அதே போல ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 3000 மனுக்கள் சரிபார்த்து உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும். அவர்கள் குடியுரிமைப் பெற்று கௌரவமாக வாழ வேண்டும்; நாடற்றவர்களாக அல்ல!

உயர்க்கல்விக் கூடங்களில் நமது நிலை என்ன?  சாமிவேலு காலத்திலிருந்து இந்நாள் வரை அந்த ஏழு விழுக்காட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறோம்! இதற்கு நாங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?  இது ஒன்றும் முடியவே முடியாத விஷயம் அல்ல!  இப்போதைய மொத்த இந்திய மாணவர்களின்  விழுக்காடு நான் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் ஏழு விழுக்காடு என்பது இந்த ஆண்டே முடிக்கக் கூடிய விஷயமே. இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆண்டே இதற்கு ஒரு முடிவு காண முடியும். இனி மேலும் இது ஒரு பிரச்சனையாக ஒவ்வொரு ஆண்டும் பேசப்படுவது கேவலமான ஒரு செயல். நாட்டில் வசிக்கும் மூன்று முப்பெரும் இனங்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் கல்விக்காக தனியார் உயர்கல்விக் கூடங்களில் விகிதாச்சரப்படிப் பார்த்தால் நாம் தான் அதிகமாகச் செலவு செய்கிறோம்! கல்விக்காக இந்தியப் பெற்றோர்கள், மற்ற இனத்தவரை விட,  அதிகமானக் கடன் சுமைகளைச் சுமக்கிறார்கள் என்பது உண்மை. ஏழைகள் என்று அழைக்கப்படும் இந்திய சமுதாயம் தனது சக்தியை விட அதிகமாகவே தங்களது பிள்ளைகளின் கல்விக்காகச்  செலவு செய்கிறார்கள்!

முன்னேறிய ஒரு சமுதாயம் இலவசக் கல்வியைப் பெறுகிறது! பின் தங்கிய ஒரு சமுதாயம் கல்விக்காகப் பெரும் கடனைச் சுமக்கிறது! ம.இ.கா.வினர் இதனை அறியாதவர்களா? ஆனால் அறியவில்லை என்கிறார்கள்! அதனால் தான் இத்தனை ஆண்டுகள் நமது சமுதாயம் செருப்படி  வாங்க்கிக் கொண்டிருக்கிறது!

இன்னும் ஏகப்பட்ட பெருந்திட்டங்கள் உள்ளன.  குறைந்த பட்சம் வருகின்ற நூறு நாட்களில் -  இந்த ஆண்டு முடிவதற்குள் - எத்தனை விழுக்காடு சாதனைப் புரிந்திருக்கிறீர்கள் என்பதை இந்தச் சமுதாயத்திற்குத் தெரியப் படுத்துங்கள்.

இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! என்று பிரதமர் அறிவித்துவிட்டார்.

இப்போது பந்து உங்கள் கையில்! இப்போது வெட்டிப் பேச்சு உங்களுடையதா அல்லது இந்த சமுதாயத்தினுடையதா என்பதை நீங்கள் தான் உங்களுடைய  செயலாக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்திற்கு மெய்ப்பிக்க வேண்டும்..

உங்களால் ஒன்றுமே ஆகவில்லை என்றால் ஒருவரைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். பிரதமர் பேசிய பேச்சு வெறும் வெட்டிப் பேச்சு! அனைத்தும் பொய்! என்பதாகத் தான் நாங்கள் பேச வேண்டி வரும். இந்த நாட்டின் பிரதமர் "இந்திய சமுதாயத்திற்கு நான் செய்வேன்!: என்று சொன்னவைகளை - அதன் பொறுப்பை - உங்களிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு ஒன்றுமே நடக்கவில்லை என்றால் குற்றவாளி ம.இ.கா. தான்! அதில் சந்தேக்கபடுவதற்கு ஒன்றுமில்லை!

குறை சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறீர்கள். சரி! ஆனால் இந்தப் பெருந்த்த்திட்டத்தின்  கீழ் ஒன்றும் நகரவில்லை என்றால் யார் வெட்டிப் பேச்சு பேசினார்? பிரதமர் தானே!  உங்களுக்கு அனைத்தும் அள்ளிக் கொடுத்த பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் உங்களை நாங்கள் குறை சொல்ல மாட்டோம். பிரதமரைத் தான் சொல்லுவோம். பிரதமருக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவது தான் உங்கள் நோக்கம் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது?

மீண்டும் சொல்லுகிறோம். வெட்டிப் பேச்சு வேண்டாம்! செயலில் காட்டுங்கள்!





No comments:

Post a Comment