Sunday 30 April 2017

இந்திய சமுதாய பத்தாண்டு வியூகப் பெருந் திட்டம்!

சென்ற வாரம் இந்திய சமுதாயத்திற்கான பத்தாண்டு வியூகப் பெருந்திட்டத்தை ம.இ.கா.வின் கூட்டமொன்றில் நமது மலேசியப் பிரதமர் "இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்!" என தமிழில் சொல்லி இந்நாட்டு இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறார்.

இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிப் பல  விமர்சனங்கள் எழுந்தாலும் "இது எதற்கும் உதவாத பெருந்திட்டம்" என்பதாக ஒதுக்கிவிட முடியாது.

நான் எந்த அவநம்பிக்கையையும் விதைக்க விரும்பவில்லை. நம்பிக்கையோடு தான் நாம் இந்தப் பெருந்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு திட்டம் என்றால் அது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு  திட்டம் என்பதாகவே அது பொருள்படும்.

இப்போது நம்மிடையே உள்ள குறைபாடுகள் எல்லாம் இந்த மாபெரும் திட்டத்தை ம.இ.கா. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான்.

இது நாள் வரை ம.இ.கா. கடந்தகாலங்களில் அறிமுகப்படுத்திய  எந்த ஒரு திட்டமும் மக்களைப் போய் சேரவில்லை என்பது தான் அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டு. நமக்கு அதிகம் தெரிந்த, நம்மால் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது தமிழ்ப்பள்ளிகளின்  சீரமைப்புப் பணிகள்  என்பது தான். அல்லது புதிய கட்டடங்கள்.

கோடிக்கணக்கில் பண உதவி கிடைத்தும் தமிழ்ப் பள்ளிகள் எந்தப் பயனையும் அடையவில்லை! கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!  ம.இ.கா.வே நமக்கு ஒரு அவநம்பிக்கையை  ஏற்படுத்திவிட்டது!

இன்றைய "மக்கள் ஓசை" ஞாயிறு இதழில் தலைமை ஆசிரியர் எம்.இராஜன் அவர்கள் இந்தப் பெருந்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது "யார் கண்டார்கள்...? 10 ஆண்டுகளில் இந்த மறுமலர்ச்சி என்ற ஒரு லட்சியத் தடத்தில் நாம் சாதிப்பது ஒரு பாதியாவது இருக்காதா? ...சில நெல்மணிகளாவது உதிர்க்காமலா போய்விடும்?" என்கிறார்!

அவரின் நம்பிக்கை வார்த்தைகளை நாமும் ஏற்கிறோம். ஆனால் நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில்  இதனைப் பார்க்கிறேன். இந்தப் பெருந்திட்டத்தின் வளர்ச்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரிந்தாக  வேண்டும். ஒவ்வொரு நூறு நாள்களுக்கும், ஒவ்வொரு பத்து மாதத்திற்கும்  எந்த அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ம.இ.கா. இதனைச் செயல்படுத்த உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும்.

தலைவர்கள் சண்டை போடலாம்! தறுதலைகள் எனப் பெயர் எடுக்கலாம்! பைத்தியங்களாகத் திரியலாம்! அது அவர்களது உரிமை!  ஆனால் ம.இ.கா. தலைமையகத்தில் ஒரு குழு அமைத்து இதற்கானத் தொடர் வெலைகள் நடந்தாக வேண்டும். திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இது இந்நாட்டு இந்தியர்களின் உரிமை.  இனி மேலும் மூடி மறைக்க இதில் ஒன்றுமில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட வேண்டும். அதனை ம.இ.கா. கண்காணிக்க வேண்டும்.

பிரதமர் இவ்வளவு செய்தும் ம.இ.கா. அதனைக் கண்காணிக்கத் தவறினால், இன்னும் ஏனோ தானோ போக்கைக் கடைப் பிடித்தால் - ம.இ.கா. வை மன்னிக்க வாய்ப்பே இல்லை! தலைவர்கள் வரலாம்! போகலாம்! ஆனால் இந்தியர்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட  வேண்டும்! அவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இனி என்ன செய்யலாம்? அடுத்த நூறு நாள்களில் என்ன முன்னேற்றம்; அடுத்த பத்து  மாதங்களில் என்ன முன்னேற்றம்? அடுத்த தேர்தலுக்கு முன் என்ன முன்னேற்றம்? இவைகள்: எல்லாம் மக்கள் மன்றத்திற்கு வர வேண்டும்.

ஒன்றுமே செய்யாமல் வெறும் வாய்ச்சவடால் பண்ணுவதும், வாயால்  வடைசுடுவதும் போதும் போதும் என்றாகி விட்டது!  இது  ம.இ.கா.விற்கு ஒர் அக்கினிப்பரிட்சை! கடைசி வாய்ப்பு!

என்ன ஆகிறது பார்க்கலாம்!

No comments:

Post a Comment