Friday 14 April 2017

குடியால் சீரழியும் இளைய சமுதாயம்!


நமது இளைஞரிடயே  பெரிய போட்டி எதுவென்றால் யார் அதிகம் குடிக்கிறார்  என்பதாகத்தான் இருக்கும்!

இதற்குத் துணை போவது போல தமிழக சினிமாக்களும் அவைகளுடைய  பங்கைச் சிறப்பாகவே செய்கின்றன!

ஒவ்வொரு தெருக்களிலும், கோவில்கள் அருகே, பள்ளிக்கூடங்கள் அருகே, மக்கள் கூடும்  இடங்களுக்கு அருகே மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டு - குடிப்பது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் விளம்பரப்படுத்துவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை  நாம் புரிந்து கொள்ளலாம்!

சாராயக்கடைகளை நடத்துபவன் அரசியல்வாதி. சினிமா, சின்னத்திரை என்று புகுந்து விளையாடுபவன் அரசியல்வாதி. ஊடகங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டவன் அரசியல்வாதி! ஆக, அவனுடைய ஆதிக்கம் அனைவற்றிலும் இருப்பதால் தமிழன் தனது குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை!

நமது நாட்டிலும் நாம் தமிழ் நாட்டைத் தான் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறோம்! அதே தாக்கம் நம்மிடமும் இருக்கிறது!

சமீபத்தில் ஓர் இளைஞன் -  ஒரு தொழில்நுட்பப் பள்ளியில் படிப்பவன் - தனது செய்முறைப் பயிற்சிக்காக வந்திருந்தான்.  வந்த நாள் முதலே அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சி இல்லை. முகத்தில் ஒரு பொலிவு இல்லை. எந்நேரமும் எதனையோ இழந்துவிட்டவன் போலவே இருந்தான்!  பயிற்சியில் அக்கறை காட்டவில்லை.  தீடீரென வருவான்; மறைந்து போவான்! பயிற்சியில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. கொஞ்சம் நெருங்கிப் பார்த்த போது அவன்  எந்நேரமும் நண்பர்களோடு "தண்ணி" அடிப்பதையே முழு நேர வேலையாகக் கொண்டுவிட்டான்! இந்தச் சமுதாயத்தின் வருங்காலங்கள் எப்படி இருப்பார்கள் என கணிக்க முடிகிறதா? ஒரு மாணவன் இன்னும் தனது கல்வியை முழுமையாக முடிக்கவில்லை - எப்படி தனது வருங்காலத்தை எதிர்நோக்கப் போகிறான்?

ஒரு நடுத்தர இளைஞர் ஒருவரை எனக்குத் தெரியும். குடிகார மன்னன்! லட்சக்கணக்கில் சம்பாதிப்பான்! லட்சக்கணக்கில் அழிப்பான்! குடிப்பது தான் முழு நேர பொழுது போக்கு! ஒரு குடிகாரக்   கும்பலே அவனோடு இருக்கும்! தீடீரென ஒரு நாள் நெஞ்சுவலி. இரத்த அழுத்தம். மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக இருதயசிகிச்சை மையத்தில் சேர்த்தார்கள். அடுத்த நாளே பைபாஸ் அறுவை சிகிச்சை. (bypass operation), சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.  சிகிச்சை நல்லபடியாக முடிந்தது என்பதைக் கொண்டாட அதற்கு அடுத்த நாளே குடித்து மகிழ ஒரு விருந்து! அதில் நமது கதாநாயகன் தான் முக்கிய விருந்தாளி! மீண்டும் மருத்துவமனை. ஒரு வாரத்திற்குப் பின்னர் கதாநாயகன் போய்ச் சேர்ந்தார்! இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நாளை அவரது பிள்ளைகள் எப்படி வளர்வார்கள்?  வளர்கின்ற பிள்ளைகளுக்கு  அப்பன் தானே முன்னுதாரணம்!

அப்பன் சரியாக இல்லை, பெரியப்பா சித்தப்பா சரியாக் இல்லை, சுற்றுப்புறம் ஒரே குடிகாரக் கூட்டம் - பிள்ளைகள் எப்படி வளர்வார்கள்?  குடிகாரத்தனமாகத் தான் வளர்வார்கள்!

குடித்துக் குடித்தே தனது வாழ்க்கையை வீணடிக்கிறது இளைய சமுதாயம். குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். ஆம்,  அது தான் நடந்து கொண்டிருக்கிறது!

உடனடியாக நமது கவனத்திற்கு வருவது தமிழ்ச் சினிமா! தமிழ் சின்னத் திரைகள்! மது அருந்துகின்ற காட்சிகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். வசனங்களில் கூட சாராயம் இடம் பெறக் கூடாது! தமிழக அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்குச் செய்கின்ற கேடு விளைவிக்கும் செயல் இது!

மதுவை ஒழிக்க வேண்டும்! அல்லது அரசியல்வாதிகளை ஒழிக்க வேண்டும்!

எப்படிப் பார்த்தாலும்  திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ? கொஞ்சம் காலம் பிடிக்கும்! அவன் திருந்தித்தான் ஆக வேண்டும்!


No comments:

Post a Comment