Sunday 25 February 2018

70-வயதுக்கு மேல் இந்தியர்களுக்கு அரசாங்க வேலை!


நமது அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அநேக இந்தியர்கள்  இத்திட்டத்தில் கீழ் பயன் பெறுவார்கள் என நம்பலாம்!  இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம.இ.கா.வும் இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாகவே தோன்றுகிறது.

தங்களது இருபதாவது,  முப்பதாவது வயதில் குடியுரிமைக்கு மனு செய்தவர்கள் இனி தங்களது  எழுபதாவது வயதில்  குடியுரிமை பெறுவர் என நிச்சயமாக நாம் நம்பலாம்!

சமீபத்தில் ஒரு பெண்மணிக்கு அவரது எழுபதாவது வயதில் தான் குடியுரிமை கிடைத்தது. இனி தான் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்! ஏதாவது அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்து இனி மிச்சம் மீதியுள்ள இருபது முப்பது ஆண்டுகளைத் தனது குடும்பத்திற்காக உழைக்க வேண்டும்.

சமயங்களில் நமது குடியுரிமைகள் தாமதமாவதற்குக் காரணங்கள் என்ன?  வேலையாட்கள் பற்றாக்குறை தான் மிக முக்கியக் காரணம். நாட்டில் படித்தவர்கள் குறைவு;  படித்தும் முட்டாள்களாக இருப்பவர்கள் அதிகம். அது அவர்கள் குற்றமல்ல.  தலைவன் வழி தான் மக்கள்!

சமீபத்தில்  'நாடற்ற' நண்பர் ஒருவர் வைத்த குற்றச்சாட்டு. "அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்கின்ற ஒர் பெண்மணி  செய்த  தவற்றினால் நான் நாடற்றவனாகி விட்டேன்! நானும் எத்தனையோ முறை விண்ணப்பித்தும் குடியுரிமை கிடைக்கவில்லை!  அவர்கள் என்ன கேட்டார்களோ அத்தனையும் கொடுத்தாயிற்று. இனி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை! அவர்கள் தான் கொடுக்க வேண்டும். குடியுரிமை இல்லை என்பதால் திருமணம் ஆகவில்லை. குறைந்த சம்பளத்தில் காலத்தைக் கடத்துகிறேன். தேர்தல் வருகிறது என்பதால் மீண்டும் ஒரு முயற்சி செய்கிறேன்!"

இப்படித்தான் பலர் உள்ளனர்.  இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் 70 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும்! பிள்ளைக்குட்டிகளைப்  பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் வேலை கொடுக்க வேண்டும்.

என்ன செய்வது?  சீனர்களைப் போல சரியானத் தலைவர்களை நாம் கொண்டிராததால் தறுதலைகளை நாம் தலைவர்களாக வைத்திருக்கிறோம்! 

இனி நாம் 70 வயதுக்கு மேல் வாழ்க்கையைத் தொடங்குவோம்! 

No comments:

Post a Comment