Saturday 10 February 2018

சபாஷ்! இந்து சங்கம்!


இந்து சங்கத்திற்கு ஒரு சபாஷ் போட வேண்டும்!

தமிழர்கள் புத்தாண்டு தை முதல் நாளுக்கு அரசாங்கம் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதாக பல ஆண்டுகளாக தமிழர் இயக்கங்கள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துக்  கொண்டிருக்கும்  வேளையில் இப்போது மலேசிய  இந்து சங்கம் தீடீர் பல்டி அடித்திருப்பது நமக்கு வியப்பைத் தருகிறது!

என்ன காரணம்?  பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ ஹெங் சியாய் கீவ் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சமூகத்திற்கு மேலும் ஒரு நாள் பொது விடுமுறை வழங்கக் கூடும் என்பதாக அறிவித்திருந்தார். பொதுத் தேர்தல் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கும் இந்த வேளையில் - இது பற்றி அறிவிப்பு வரலாம் என்னும் வேளையில் - இப்போது மலேசிய இந்து சங்கம் தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கை  எடுத்திருப்பது  எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.  இப்போது இவர்கள் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியர்களின் புத்தாண்டு என்பதாகக் கூறி அரசாங்கத்திடம் மகஜர் சமர்ப்பித்திருக்கின்றனர். 

 இனி இவர்கள் - அதாவது தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள் மற்றப் பிரிவினர் -  தங்களது மரபு சார்ந்த       புத்தாண்டைக்  கொண்டாடாமல்  ஏப்ரல் 14-ம் தேதியையே தங்களின் புத்தாண்டாகக் கொண்டாடுவர் என்று இந்து சங்கம் உறுதி அளிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். மலேசிய இந்து சங்கத்தின் கொள்கை இது தான்: தை மாதமும் வேண்டாம்!  ஏப்ரல் மாதமும் வேண்டாம்! உனக்கும் வேண்டாம்! எனக்கும் வேண்டாம்! இப்போது எப்படியோ இனியும் அப்படியே இருக்கட்டும்!   இது தான் இந்து சங்கத்தின் உயர்ந்த கொள்கை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்!

காரணம் தமிழர் இயக்கங்கள் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை! அவர்களும் வேட்டியைத் தூக்கிக்  கொண்டு களத்தில் இறங்குவார்கள்! அதுவே அரசாங்கத்திற்குப் சாதகமாகப் போய்விடும்! இதெல்லாம் டத்தோ மோகன் ஷானுக்குத் தெரியாதா என்ன? 

இப்போது ஒன்று நமக்குப் புரிகிறது. பல பிரச்சனைகளில் இந்து சங்கம் தலையிடுவதில்லை! காரணம் அவை தமிழர்களின் பிரச்சனை என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்!  தெலுங்கர்கள், மலயாளிகள், சீக்கியர்கள் பிரச்சனைகளை மட்டும் தான் கையில் எடுப்பார்கள் என்று இனி நாம் நம்பலாம்!

சபாஷ்!  டத்தோ மோகன் ஷான்!


No comments:

Post a Comment