Saturday 24 February 2018

கேள்வி - பதில் (73)


கேள்வி

கமல் சொன்னபடி புதிய கட்சி தொடங்கி விட்டாரே!

பதில்

ஆமாம். அவருக்கு நமது வாழ்த்துகள்! சரியோ, தவறோ சொன்னார் செய்து விட்டார்! தொடங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம், விவாதம் செய்யலாம்!  ஒரு முடிவை எடுத்து விட்டால் அதன் பின் யோசிக்க ஒன்றுமில்லை! அது தவறான முடிவாகக் கூட இருக்கலாம். நிறைவேற முடியாத முடிவாக இருக்கலாம். ஆனால் அவர் மனதிலே ஏதோ ஒரு நம்பிக்கை. ஆரம்பித்து விட்டார்!

கமல் தனது கட்சியின் பெயரை "மக்கள் நீதி மய்யம்" என்று வைத்திருக்கிறார். அந்தப் பெயருக்காகவே நான் அவரை வாழ்த்துகிறேன். காரணம் திராவிடம் என்னும் பெயரை நான் ஆதரிக்கவில்லை. அவர் அதிகமாக திராவிடம் பற்றிப் பேசியவர். அதனால் அவர் திராவிடம் என்னும் சொல்லை தனது கட்சிக்குப் பயன்படுத்துவார் என பலர் எதிர்பார்த்தனர். தமிழக மேடை விவாதத்தில் ஒருவர் "கமல் தனது கட்சிக்குச் திராவிடம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவார் என்று நினைத்தேன் அவர் பயன்படுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது!"  எனக் கூறினார்! இது தமிழர் அல்லதாரின் மன நிலை!  இனி யார் கட்சி ஆரம்பித்தாலும் திராவிடம் என்னும் சொல் தவிர்க்கப்படும் என நான் நம்புகிறேன்.

கமல் தனது கட்சியின் கொள்கைகளை இன்னும் வெளியாக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு. உண்டு.  நேரடியாகவே களத்தில் இறங்குவேன் என்கிறார். பெரிய பெரிய கொள்கைகளை வைத்துக் கொண்டு  கடைசியில் எதையுமே நிறைவேற்ற இயலாமல் போன கட்சிகள் தான் அனைத்தும்! நேரடியாகவே களத்தில் இறங்குவேன் என்கிறார் கமல். அவர் சொல்லுவது நமக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தான்,. செயல் தான் முக்கியம் என்று அவர் முழங்கினாலும் அதனை எப்படி செய்து காட்டப் போகிறார் என்று நாமும் தலைமுடியை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!   எதைச் செய்ய வேண்டுமானாலும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்!

அவர் கட்சி தொடங்கிய அன்று கலாம் படித்த பள்ளிக்குச் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒன்றே போதும் அவருக்கு அரசாங்கத்தின் எந்த  உதவியும்  கிடைக்காது என்று. இந்த நிலையில் அவர் எதனைச் சாதிக்கப் போகிறார்?  அவர் அரசாங்கத்தை அமைத்தால் மட்டுமே அவர் நினைப்பது செய்ய முடியும். இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை. தேர்தல் வரும் வரை - அந்த இடைப்பட்டக்  காலத்தில் -  எதனைச் சாதிக்கப் போகிறார்? அவருடைய  செயல்திட்டங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிய பொறுத்திருக்கத் தான் வேண்டும்.

ஒரு கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஓர் ஆட்சியை அமைக்க எல்லாராலும் முடியாது. அது கமலால் முடியும் என்று சொல்லவும் முடியவில்லை. 

ஒன்று மட்டும் உறுதி கமல் தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கிறார். அதனை மக்கள் மன்னித்து விடுவார்கள். அவர் பிராமணர் என்று வரும் போது தான் தமிழக மக்கள் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். இவர் நம்பக்கூடியவரா என்று ஒரு சந்தேகம் உண்டு.  நம்பக் கூடியவர் என்பதை அவர் தான் மெய்ப்பிக்க வேண்டும்!

                                                                           


No comments:

Post a Comment