Thursday 1 February 2018

தைப்பூசம் நினைவலைகள்


எனது நண்பர் - என்னை விட வயதில் மூத்தவர் - "டேய், வாடா பத்துமலைக்குப் போய்ட்டு வருவோம்!" என்று என்னைக் கூப்பிட்டார்.  அதற்கு முன்னர் நான் பத்துமலை போனதில்லை.  அதனால் என்ன, போய்ப் பார்த்து விட்டுத்தான் வருவோமே என்று எனக்கும் தோன்றியது. "சரி! போவோம்!" என்று நானும் ஒப்புக் கொண்டேன்.

பஸ் பிரயாணம் தான்.  ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கூட்டம் அதிகம்.பஸ்ஸில் போகும் போதும் நெருக்கடி. வரும் போதும் நெருக்கடி. பத்துமலை சென்றால் அங்கும் நெருக்கடி.  கூட்டம்! கூட்டம்! கூட்டம்!  இருந்தாலும் அந்தக் கூட்டத்திலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்தது! சரி, நாங்கள் வந்த காரியத்தைப் பார்க்க வேண்டும் அல்லவா? நானும் நண்பரும் மலை ஏறினோம். முதல் படியிலிருந்து மேலே கடைசிப் படி வரை ஏறி முடித்தோம்! குகையினுள் உள்ளே சென்று சுற்றிச் சுற்றிப் பார்த்தோம். ஒரு சில இடங்களைப் பார்க்கும் போது எப்போது கழற்றிக் கொண்டு விழுமோ என்கிற அச்சமும் வந்தது!

எல்லாம் முடிந்து கீழே இறங்கும் போது இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததே தவிர குறைவதாகக் காணோம்! அன்று என்ன நிலையோ அதே நிலை தான் இன்றும் என்று இப்போதும் கேள்விப்படுகிறோம்! அதிசயம் ஒன்றும் இல்லை. புனிதத் தலங்களில் எந்தக் காலத்திலும் கூட்டங்கள் குறைவதில்லை! அது தான் புனிதத் தலங்களின் விசேஷம்!

நானும் எனது நண்பரும் பத்துமலைக்குக் போகும் முன்னரே நாங்கள் ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொண்டோம். எத்தனை  மணிக்குப் புறப்பட வேண்டும். எத்தனை மணிக்குப் பத்துமலையில் இருக்க வேண்டும். பத்துமலையில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட வேண்டும். திரும்பி வரும் போது எங்களூரில் தைப்பூச விசேஷத்திற்காக ஒரு தமிழ்ப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தையும் பார்த்து விட வேண்டும் என்பதாக எங்களது  நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தியிருந்தோம். 

எங்களது நிகழ்ச்சி நிரலின் படி கடைசி நிரலுக்கு வந்து விட்டோம். அந்தத் தமிழ் திரைப் படத்தையும் பார்த்து விட்டோம். என்ன தான் படம் அது? சிவாஜி-சரோஜாதேவி  நடித்த "பாகப்பிரிவினை". ப்லருக்கு ஞாபகம் இருக்க நியாயமில்லை. ஆனாலும் அதில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலம். அதில் ஒன்று "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!"  என்கிற பாடல்.

அதன் பிறகு நான் எந்தத் தைப்பூசத்திலும் கலந்து கொண்டதில்லை. அந்தக் கூட்ட நெரிசல் எனக்கு வேண்டாம்! ஆனால் பத்துமலைக்குச் சென்று வந்திருக்கிறேன். நிறைய மாற்றங்கள். 

ஒரே ஒரு மாற்றம். எனது அந்த நண்பர், கோவிந்தசாமி பத்தர், இப்போது இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டார்.  ஆனால் அந்த நினைவுகள் மறையவில்லை. இன்னும் அப்படியே மனதில்!

No comments:

Post a Comment