Tuesday 6 February 2018

கேள்வி - பதில் (72)


கேள்வி

ரஜினியும் கமலும் அரசியலில் ஒன்று சேர்வார்களா?

பதில்

ஒன்று சேரலாம்.  வாய்ப்பிருக்கிறது. ஆனால் ரஜினி, கமலோடு சேர்வாரா என்பது ஐயமே! காரணம் அவர் தனித்து நின்று தனது பலம் என்ன என்பதையே காட்ட விரும்புவார். கமல்,  ரஜினியோடு சேர விரும்பலாம். அரசியலில் கமலுக்குப் பெரிய  அரசியல் பலம்  இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சவடால் தனம் இருக்கிறது! ரஜினிக்கு அதுவும் இல்லை. மௌனமாக இருந்தே சாதிக்கப் பார்க்கிறார்! 

இருவருமே வெவ்வேறு அரசியல் பேசுகிறார்கள்.  ரஜினி ஆன்மிக அரசியல் என்கிறார். ஆன்மிக அரசியல் என்றால் அது பா.ஜ.க. வின் பாதை. மதத்தின் மூலம் நாட்டின் அமைதியைக் கெடுப்பது. ரஜினியின் பாதை அதுவாகத்தான் இருக்கும் என்பது அவசியம் இல்லை. ஆனால் அவர் பா.ஜ.க. வோடு கை கோர்க்கலாம். கமலுக்கு  ஆன்மிகமும் இல்லை கடவுள் வெறுப்பும் இல்லை என்கிறார். கமல் ரஜினியோடு அல்லது வேறு யாரோடாவது கூட்டுச் சேர்ந்தால் உண்டு.  இல்லாவிட்டால் தெண்டம்!

உண்மையைச் சொன்னால் இவர்கள் இருவருமே தமிழக அரசியலுக்குத் தேவை இல்லாதவர்கள்!  இவர்கள் கொள்கை என்ன, அரசியல் நோக்கம் என்ன என்பதில் தெளிவு இல்லாதவர்கள்!  இருவருமே கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவர்கள். ஆனாலும் அவருக்கு நேர்ந்த தேவையற்ற தாக்குதலின் போது வாய்த் திறக்காதவர்கள்! அதிலும் கமல் பட்டும்படாமலும் நழுவுகிறார்!

சரி, அதை விடுவோம். தமிழ் நாட்டில் என்ன தான் பிரச்சனைகள் உண்டு என்பதைக் கூட அறியாதவர்கள் இவர்கள். ரஜினின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியம் என்று  சொல்லப்படுகிறது. அவருடைய நேர்மையை நாம் மதிக்கிறோம். அவரோ திராவிட அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார். நாமும் அதையே விரும்புகிறோம். ரஜினியும், கமலும் திராவிட அரசியலை ஒழிக்க ஓரளவே உதவுவார்கள் என்று சொல்லலாமே தவிர மற்றபடி முற்றிலுமாக ஒழிக்க இவர்களால் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் ரஜினியையும், கமலையும் ஆதரிப்பவர்கள் யார்?  தெலுங்கர்கள், கன்னடர்கள்,  பிராமணர்கள், மலையாளிகள்  - இவர்கள் தான் இந்த இருவரின் முக்கிய ஆதரவாளர்கள். காரணம் ஒரு தமிழர், தமிழக முதல்வராக வருவதை இவர்கள் விரும்பவில்லை!  தமிழக ஊடகங்களைக் கூர்ந்து கவனித்தால் இது விளங்கும்! அதனால் தான் இவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு ரஜினிக்கு மிகப்பெரிய  ஆதரவு இருப்பது போல்  தொலைக்காட்சி. பத்திரிக்கை வாயிலாக  ஒரு மாயையை  உருவாக்குகிறார்கள்! தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கு  எந்த ஆதரவும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்துகிறார்கள்! 

ரஜினியும்  கமலும்  ஒன்று  சேர்ந்தாலும்  சேராவிட்டாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை! அப்படியே  ஆட்சி  அமைத்தாலும்  தமிழ் நாடு  இன்னொரு  ஆபத்திற்குத் தயாராகிறது  என்று அர்த்தம்! 

தமிழர்களின்  எதிர்காலத்திற்கு  தமிழர்களின் ஆட்சி தான் தேவை!  நடிகர்களின்  ஆட்சி  எந்த வகையிலும் நல்லதல்ல!




No comments:

Post a Comment