Tuesday 13 February 2018

"ஸ்பைடர் மேன்" டத்தோ ஆறுமுகம்!


தாமதமாக வந்தாலும்  சிலந்தி வலைகளோடு வந்து   தனது பெயரை இரண்டு இடங்களில் வலைத்துப் போட்டிருக்கிறார் டத்தோ ஆறுமுகம்!

ஆசியாவின் சிறந்த "கோல் கீப்பர்" என்று பெயரெடுத்தவர். அவர் காலத்தில் காற்பந்து விளையாட்டில் கோல் கீப்பராக அவரோடு ஒப்பிடக் கூடியவர் யாரும் இல்லை! அதனால் தான் மலேசிய ரசிகர்கள் அவரை "ஸ்பைடர் மேன்" என்று அழைத்தார்கள்.  அவர் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் அவருடைய உயரமே வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.



இப்போது நமது சிலாங்கூர் அரசாங்கம் அவரை நாம் பெருமைப்படும் அளவுக்கு கௌரவித்திருக்கிறது. கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாசிதுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இளம் வயதில் அவர் ஓடி ஆடி விளையாண்ட "பாடாங் பெக்கிலிலிங்" என்னும்  கால்பந்து ஸ்டேடியத்திற்கும் அதனைச் சுற்றி அமைந்துள்ள "ஜாலான் பெக்கிலிலிங்" என்னும் பிரதான சாலைக்கும் டத்தோ ஆறுமுகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது நமது சமுதாயத்திற்குப் பெருமை. 

டத்தோ ஆறுமுகம் காற்பந்து துறையில் உலக அளவில் சிறந்த கோல்காவலர்  என்று பெயர் எடுத்தவர். தான் வாழ்ந்த இடத்திலேயே காற்பந்து குழுவை ஏற்படுத்தி பல விளையாட்டாளர்களை உருவாக்கியவர்' விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர்.

அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும்  அவரது இணயற்ற சேவையை  இன்னும் மறவாமல் அவருக்காக அரசாங்கத்திடம் அவரது பெயரை முன்மொழிந்த பல நல்ல உள்ளங்களுக்கு நமது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

இது போன்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த இன்னும் பல சேவையாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நாம் கேட்டுக் கொள்வது நமது கடமை.

டத்தோ ஆறுமுகத்தின் பெயர் என்றென்றும் நம்மிடையே வாழும்! நாமும் அவருடைய குடும்பத்தினரோடு சேர்ந்து இந்த கௌரவத்திற்காக மகிழ்ச்சி அடைகிறோம்!



No comments:

Post a Comment