Friday 2 February 2018

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்


நிபோங் திபால் மெதடிஸ்ட் இடைநிலைப் பள்ளி மாணவி  வசந்தபிரியா கடைசியில்  சுய நினவில்லாமல், கொமா நிலையிலேயே இறந்து போனார்.

அவரது பள்ளி ஆசிரியையின் கைப்பேசியைத் திருடினார் என்று ஆசிரியையால் குற்றம் சாட்டப்பட்டு, அந்த மாணவி தான் திருடவில்லை என்று கூறியும், அதனைப் பொருட்படுத்தாமல் "நீ தான் திருடினாய்" என்று அந்த ஆசிரியையும் அவரது கணவரும் மேலும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களும் அந்த மாணவியைக் குற்றம் சாட்ட அந்தக் குற்றச்சாட்டை அந்த மாணவியால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து அங்கிருந்து பெற்றோரால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் கடைசி கடைசியாக உயிர் துறந்தார்.

ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மரணம். 14 வயது மாணவி. 14 ஆண்டுகள் பெற்றோர்களால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு மகள் இப்படி அநியாயமாய் தற்கொலை செய்து கொண்டாளே என்று நினைக்கும் போது  நமக்கே மனம் பதை பதைக்கிறது. பெற்றோர்களின் இழப்பு என்பது சாதாரண வாரத்தைகளால் வர்ணிக்க இயலாது. பல கனவுகளோடு அந்தப் பெற்றோர்கள் அவளை வளர்த்திருப்பர்.  டாக்டர் ஆக வேண்டும்,  இஞ்சினியிருங் படிக்க வேண்டும் என்று ஏதாவது  அந்தக் குழந்தையின்  மனதிலே புதைந்திருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றுமில்லாமல்  வெறுமையாய் போய்விட்டது.

அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மை தான். ஆனால் அவரைத் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அந்தத் தூண்டுதல் எங்கிருந்து  வந்தது? ஏன் அந்தக் கடைநிலைக்கு அவர்    தள்ளப்பட்டார்?  என்பது முக்கியமான கேள்வி.

அவரது பள்ளியில் ஐந்து மணி நேரம் நான்கு ஆசிரியர்களால் அவர் விசாரிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை எப்படி நடந்தது? அவர் அடித்து துன்புறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. தனி அறையில்  அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு முக்கியமான கேள்வி இங்கு நாம் எழுப்பித் தான் ஆக வேண்டும். இவ்வளவு நடந்தும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ன ஆனார்? ஏன்? அவரது பள்ளியின் நடந்த இந்த 'விசாரணை' அவருக்குத் தெரியாமலா  நடந்திருக்கும்?  அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரால்   எப்படி ஒதுங்கிக் கொள்ள முடியும்? ஏன், அந்தப் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் இதனைக் கண்டு கொள்ளவில்லை? அவர் தானே இதனை முன்னின்று நடத்திருக்க வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.

எதற்கும் நம்மிடம் பதில் இல்லை. உண்மையைச் சொல்ல அந்த மாணவியும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொலைந்து போன கைப்பேசியை வாங்கிவிடலாம் ஆனால் தொலைந்து போன உயிரை வாங்க முடியுமா? ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அடியாளாக இருக்க வேண்டாம்! இதுவே நமது வேண்டுகோள்!

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.  செய்யும் என நாமும் நம்புகிறோம். 




No comments:

Post a Comment