Tuesday 5 June 2018

இனி தற்காலிகம் வேண்டாம்!


புதிய அராசாங்கத்திற்குப் பல வேலைகள். இத்தனை ஆண்டுகள் ஊரை ஏமாற்றிக் கொண்டு திரிந்த பல இலாக்காக்களில் கல்வி இலாக்காவும் ஒன்று. அவர்கள் தமிழ்ப் பள்ளிகள் என்றாலே ரொம்பவும் இளக்காரமாக பார்ப்பவர்கள். அவர்கள் உயர்ந்தவர்களாம், நாம் தாழ்ந்தவர்களாம்! அறிவில்லாதவர்களெல்லாம் அதிகாரிகளாக இருந்தால் அதிகாரம் தூள் பறக்கும்!  அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவனே ம.இ.கா. காரன் தான்! அதனால் தான் அவர்களுக்கு அவ்வளவு அதிகாதம்!

தமிழ்ப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை விட தற்காலிக ஆசிரியர்களே அதிகம். பல பள்ளிகள் இந்தத் தற்காலிக ஆசிரியர்களை வைத்தே பல ஆண்டுகளை ஓட்டிவிட்டனர்! இன்னும் ஓட்டிக் கொண்டும் இருக்கின்றனர். ம.இ.கா. வில் உள்ளவர்கள்: இதனைக் கண்டு கொள்ளும் அளவுக்கு அறிவு உள்ளவர்களாக இல்லை!

புதிய அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் இது தான். இனி தமிழ்ப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் என்பவர்கள் வேண்டாம். நீண்ட நாள் தற்காலிக ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களாக மாற்ற வேண்டும்.

தேசியப் பள்ளிகளுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அதே போல தமிழ்ப்பள்ளிகளுக்கும் அனைத்து உரிமைகளும்  கொடுக்கப் பட வேண்டும்.  இது ஒன்றும் பசார் மாலாம் வியாபாரம் அல்ல!  பிள்ளைகளின் கல்வியில் எந்த சமரசமும் தேவை இல்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி என்பது அவர்களின் உரிமை.

கடந்த காலங்களில் ஆசிரியர் பாற்றாக்குறை என்று சொல்லிக் கொள்வதில் கல்வி அதிகாரிகள் பெருமைப்பட்டனர். அதுவும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பற்றாக்குறை! அது ஒன்று பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல. அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் தவறி விட்டனர் என்பது தான் பொருள். கடமைகளைச் செய்யாமல் பெருமைப்பட்ட ஒரே கூட்டம் என்றால் அது இந்தக் கூட்டம் தான்!

ஆனாலும் இவைகள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும். இனி மேலும் கடமைகளைச் செய்யாதவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்.

புதிய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்.  தமிழ்ப்பள்ளிகளுக்கு இனி தற்காலிகம் வேண்டாம்.நிரந்தரமான, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே வேண்டும். கவனிப்பார்கள் என நம்புவோம்!

No comments:

Post a Comment