Wednesday 6 June 2018

ஆங்கிலம் படிங்க..!


"சீக்கிரம், ஆங்கிலம் படிங்க!" என்று உத்தரவு போட்டிருக்கிறார், பிரதமர். 

"ஆமாம்! அப்படி! இப்படி!" என்று காரணகாரியங்களைக் கண்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் மலாய்ப் பண்டிதர்களையோ அல்லது அரசியவாதிகளைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. சும்மா சொல்லிக் கொண்டிருந்தால் ஏதோ எருமை மாட்டின் மேல் மழை பெய்த கதை தான்! எதுவும் நடக்காது! அதனால் நேரடியான பாய்ச்சல்! ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு வரியில் முடித்து விட்டார் பிரதமர்.

ஒரு வேளை ஆங்கிலம் தெரியாவிட்டால் உங்களுக்குப் பதவி உயர்வு இல்லை என்று அடுத்த அடி கூட விழலாம்! அல்லது மற்றவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்படலாம்! எதுவும் நடக்கலாம்! பிரதமரைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஏதோ குண்டு வீசித் தாக்குவது போல் இருக்கிறது!

அதனால் என்ன? நல்லது நடக்க வேண்டும் என்றால் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். அதனைச் சரியாக செய்திருக்கிறார் பிரதமர். "மயிலே, மயிலே" என்றால் இறகுகள் தானாக விழப் போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்!

பள்ளிகளை எடுத்துக் கொண்டால்  நீண்ட காலமாக சொல்லப்படும் ஒரு காரணம் கிராமப்புறங்களில் இருக்கும் மலாய் மாணவர்களால் ஆங்கிலத்தில் போட்டிப் போட முடியாது என்பது தான். இது உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. தோட்டப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கிராமப்புற மாணவர்கள் தான். அவர்களால் முடியும் போது மலாய் மாணவர்களால் ஏன் முடியாது? இத்தனைக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக ரீதியில் பல போட்டிகளில் பங்குப் பெற்று பல பரிசுகளை வாங்கியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம்  மலாய் ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம். அத்தோடு கல்வி இலாக்காகளில் வேலை செய்யும் ஆங்கிலம் தெரியாத மந்தப்புத்திகளும்  காரணம் என்று சொன்னாலும் தப்பில்லை!  அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் மற்றவர்களுக்கும் ஆங்கிலம் தெரியக் கூடாது  என்பது தான் அவர்களின் உயர்ந்த எண்ணம்!

இதற்கெல்லாம் ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டார் பிரதமர். "செய் அல்லது செத்து மடி"  என்பது தான் பிரதமரின் இந்தத் திடீர் அறிவிப்பு! உலக நாடுகளோடு ஒப்பிட வேண்டுமென்றால் ஆங்கிலத்தை அலட்சியப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை தொடார்ந்தாற் போல அலட்சியப்படுத்தியது  முந்தைய அரசு.

இனி ஆங்கிலம் தெரிந்தால் தான் மவுசு என்கிறது புதிய அரசு!

No comments:

Post a Comment