Thursday 15 December 2022

ஏன் ம.இ.கா. விற்கு இந்த நிலை?

 

ம.இ.கா. வைப் பற்றி பேசும்போது நமக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

ஒரு காலகட்டத்தில் பெரியவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி இன்று இந்தியர்களால் கைவிடப்பட்ட ஒரு கட்சியாக, இந்தியரிடையே செல்வாக்கை இழந்த ஒரு கட்சியாக தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் இன்று ம.இ.கா. வை எதிர்ப்பதில்  முனைப்புக் காட்டும் பலர் அன்று ம.இ.கா.வில் இருந்தவர்கள் தான் என்பதும் உண்மை. பலர் ம.இ.கா. வின் மூலம் பலன் அடைந்தவர்கள் என்பதும் உண்மை. இப்படி பலன் அடைந்தவர்கள் ம.இ.கா.வை ஏன் வெறுக்க வேண்டும்?  அறிவு இல்லையென்றால் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் பொறுத்துக்கொண்டு போய்விடலாம். ஆனால்  எப்போதும் அப்படி மௌன சாமியாராக இருந்துவிட முடியாது!

ம.இ.கா.வின் மிகப்பெரிய தவறு என்பது துன் சாமிவேலு ஆரம்பித்துவைத்த  மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தான். இப்போதும் அதுபற்றி தான்  பேசப்படுகிறது. சென்ற 2018 தேர்தலிலும் பேசப்பட்டது. இப்போது 2022 தேர்தலில் பேசப்பட்டது. அடுத்த பொதுத் தேர்தலிலும் பேசப்படும். சாமிவேலுவும் டாக்டர் மகாதிரும்  செய்த மோசடிகளை, தில்லுமுல்லுகளை மக்களால் இன்றளவும் மறக்க  முடியவில்லை.  இன்றும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் சொல்லத்தான் ஆளில்லை! சாமிவேலு அவர்கள்  இந்தியர்களுக்குச் செய்த மிகப்பெரிய தீங்கு மைக்கா ஹொல்டிங்ஸ்! அவர் எத்தனை நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவைகள் அனைத்தும் இந்த ஒரு தீங்கினால் அடிபட்டுப் போய்விட்டன!

துன் சம்பந்தன் தோட்டப்பாட்டளிகளிடமிருந்து பத்து பத்து வெள்ளியாக  வாங்கினார். அந்தப் பணம் இன்று தோட்டங்களாக பலருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறன.  துன் சாமிவேலு அதே தோட்டப் பாட்டாளிகளிடமிருந்து  ஆயிரம் ஆயிரமாக வாங்கினார். இன்று அந்தப் பணம் அந்தப் பாட்டாளிகளைப் புதைக்கக்கூட பயன்படவில்லை! மிகப்பெரிய துயரம்.

அன்று துன் சாமிவேலு செய்துவிட்டு போனதை  இன்று அவரது சிஷ்யர்கள் 'மித்ரா' என்கிற அரசாங்க அமைப்பை வைத்துக் கொண்டு காரியங்களைச் சாதித்தனர்! அன்று படித்தவர்கள் இல்லை அதனால் அவரால் இந்திய சமூகத்தை ஏமாற்ற முடிந்தது! இப்போது நிலைமை வேறு.  சிஷ்யர்களால் இந்திய சமூகத்தை ஏமாற்ற முடியவில்லை! இப்போது படித்தவர்கள் அதிகம்!

எப்படிப் பார்த்தாலும்  ம.இ.கா.வை வலுவிழக்க செய்வதற்கு இந்த இரண்டு பிரச்சனைகளும் பூதாகரமாக கண்முன்னே நின்று கொண்டே இருக்கும். இப்போது பதவிகளில் உள்ளவர்களால் இதனைச் சமாளிக்க முடியாது என்றே  தோன்றுகிறது. அவர்கள் கவனமெல்லாம் தங்களின் தொப்பைகளை   வளர்த்துக் கொள்ள ம.இ.கா. வை தங்க முட்டை இடும் வாத்தாகவே பார்க்கின்றனர்! 

ஏன் இந்த நிலை என்றால் சுயநலம்! சுயநலம்! சுயநலம்! பொதுபணிகளுக்கு இலாயக்கில்லை!

No comments:

Post a Comment