Tuesday 13 December 2022

பதவி பறிக்கப்படும்!

 


பிரதமர் அன்வார் இப்ராகிம் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்!

தனது அமைச்சரவையில் உள்ளவர்களோ அல்லது அதிகாரிகளோ   இலஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டால்  அவர்கள்  உடனடியாக நீக்கப்படுவார்கள் என்று பிரதமர் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்!

இதுவரையில் மலேசிய அரசியலில் இப்படி ஓர் எச்சரிக்கையை எந்த ஒரு பிரதமரும் கொடுத்ததாக ஞாபகமில்லை. சமீப காலங்களில்  பிரதமர் நஜிப், பிரதமர் முகைதீன் அல்லது  பிரதமர் இஸ்மாயில் - இவர்கள் இப்படியெல்லாம்  பேசுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை! அவர்களை நமக்குத் தெரியும்! ஆனால் அன்வார் அப்படியல்ல! அவர் இப்படியெல்லாம் பேசக்கூடியவர் என்பதை நாம் எதிர்பார்த்தோம். அவர் சரியாகவே செய்திருக்கிறார்!

ஒருசிலர்  'இப்படியெல்லாம் பேசிவிட்டால் இவர்கள் திருந்தி விடுவார்களா?' என்று கேட்பவர்கள் உண்டு. உண்மை தான்.  அப்படியெல்லாம் திருந்தி விடுவார்கள்  என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் அன்வார் அமைச்சரவையில் அவர்கள் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள்  எனக் கொஞ்சமாவது நம்பலாம்! அது தான் அன்வார் இப்ராகிம்! நாம் ஏன் இத்தனை ஆண்டுகள் அன்வார் பிரதமராக வரவேண்டும் என்று  தலை தலையாய் அடித்துக்கொண்டோம், தெரியுமா? இந்த நாட்டை இலஞ்ச ஊழலிலிருந்து காப்பாற்ற வேறு ஆள் இல்லை என்பதால் தான்.

பெருமைமிக்க நாடாக வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாட்டை இந்த இலஞ்ச ஊழல் எப்படி வந்து சேர்ந்தது என்கிற கேளவி அனைவரிடமும் உண்டு. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் டாக்டர் மகாதிர் என்று பொதுவாக சொல்லப்படுவது உண்டு. ஆமாம்! அவர் தான் "வேலை செய்யாமலே பணம் சம்பாதிப்பது எப்படி?",  "அதிகப்பணம் சம்பாதிக்க வேண்டுமா?", "குறைவான சம்பளத்தில் கோடிகளில் புரளும் வழிகள்!" போன்று தொடர்ந்து பாடம் எடுத்தவர்!  அவர்  எடுத்த பாடங்கள் தான் நாட்டை தீயென  பற்றிக்கொண்டது! அது தான் இந்த அளவுக்கு நாட்டை சீரழிக்கும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது!

நாட்டில் இலஞ்ச ஊழலை சரி செய்வதற்கு, சீர்படுத்துவதற்கு இப்போது ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார் பிரதமர் அன்வார் இப்ராகிம். இதுவே சரியான நேரம். அவரால் முடியும் என்னும் நம்பிக்கையும் நமக்கு உண்டு. அவர் பதவிக்கு வருமுன்னரே தனது சொத்துகளை அறிவித்துவிட்டு வந்தவர். வேறு எந்த ஒரு பிரதமரும்  அதனைச் செய்யும் தைரியம் இல்லாதவர்கள்! ஊழலிலேயே சுழன்று கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக தங்களது சொத்து விபரங்களைக் கொடுக்க முன் வரமாட்டார்கள்!

பிரதமர்  அன்வார் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். நாட்டைச் சரியான வழியில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார். தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் இருக்கின்றன. அனைத்தும் தீர்க்கப்படும் என நாம் நம்பலாம். நேர் வழியே அவர் வழி!

அவருக்கு நமது மனப்பூர்வமான  ஒத்துழப்பைக் கொடுப்போம்!

No comments:

Post a Comment