Wednesday 7 December 2022

ஏன் கூடுதல் அமைச்சர்கள்?

ஏன் இந்திய சமுதாயத்திற்குக் கூடுதல் அமைச்சர்கள் தேவை? அதுவும் இந்திய அமைச்சர்கள்?

மலேசியர்கள் அனைவரும் ஒரே இனமாக செயல்பட வேண்டும். ஒரே குரல், ஒரே மக்கள் - இப்படிப் பேசுவதில் தவறு ஒன்றுமில்லை.

நமது தொகுதி சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மலாய்க்காரர் என்றால் அல்லது சீனர் என்றாலும் ஒரு சில விஷயங்களை நாம் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது! இந்தியர்கள் நிறைய பேர் குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அந்தப் பிரச்சனையை ஒரு மலாய்க்காரரால் அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல முடியாது! அது அவரது சமுகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தும். மேலிடத்திலும் வரவேற்பைப் பெறாது!  பிரச்சனையைக் கொண்ட செல்ல ஓர் இந்தியர் தேவை. அதில் ம.இ.கா. தோற்றுவிட்டது என்பது வேறு கதை.

அதுவே தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை என்றாலும் அதுவும் மலாய்க்காரர்களால் முழுமனதுடன் செயல்பட முடியாது. மலாய்  அரசியல்வாதிகளில் பெரும்பாலும் ஒரே மொழி என்கிற கொள்கை உடையவர்கள்! அதுவும் ஒரு தடையாகவே இருக்கும். அதுவே ஒரு சீனராக இருந்தால் பிரச்சனைகளைக் கொண்டு செல்ல கொஞ்சம் எளிதாக இருக்கும். சென்ற பக்காத்தான் ஆட்சியில் துணைக் கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சீனப் பெண்மனி. சீனர் என்றால் கூட நமக்குத் தடையில்லை. ஆனால் மலாய்க்காரர்களின் போக்கு வேறு மாதிரி.

இப்போது இன்னொரு அமைச்சர், குறிப்பாக இந்திய அமைச்சர்  ஒருவர்,  இந்தியர்களின் நலன் காக்க தேவைப்படுகிறார். இந்தியர் நலன் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, இதுவரையிலும் அக்கறைக் காட்டவில்லை. அதனால் ஏற்பட்ட பாதகங்கள் என்ன?  எல்லாத் துறையிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம். அதை ஒப்புக்கொள்ள ம.இ.கா. தயாராகயில்லை. அவர்களைப் பொறுத்தவரை நாம் முன்னேறிவிட்ட சமூகம்! அதற்கு மேல் அவர்கள் பேச தயாராகயில்லை!

அதே போல ஆலயங்கள்  வரும் போதும் கொஞ்சம் சிக்கல்கள் உள்ளன.  அனுமதி இல்லாத இடங்களில் எல்லாம் கோவில்களைக்கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்திருக்கிறோம். ஒரு ஒழுங்கு இல்லை. யார் வீட்டு நிலத்திலோ கோயில்கள். பிரச்சனைகள் பல! அதைத் தீர்ப்பதற்கு நாம் மலாய்க்கார சட்டமன்ற உறுப்பினரிடம் போவது நமக்கே நியாயமாகத் தோன்றாது!

இப்படிப் பல பிரச்சனைகள். இந்தியர்கள் அல்லாத பிற இனத்தவர் இருந்தால் நம்முடைய பிரச்சனைகளைச் சரியாகக் கொண்டு செல்ல இயலாது. அதனால் தான் ம.இ.கா.வினர் பல பிரச்சனைகளை நம்மிடமே விட்டுவிட்டனர்!

ஆனால் இப்போது பிரச்சனைகள் பெரிதாக வளர்ந்துவிட்டன. மூடி மறைப்பதில் பயனில்லை.  இப்போது நாம் முற்றிலுமாக ஒருமைப்பாட்டு கூட்டணியைத் தான் நம்பியிருக்கின்றோம். அதற்காகத்தான் நமக்கு இந்தியர்களின் நலன் காக்க இந்தியர்களின் அமைச்சர்கள் தேவை என்கிறோம்.

நலமே நடக்கும் என நம்புகிறோம்!

No comments:

Post a Comment