Wednesday 28 December 2022

அவரின் கீழ் வரவில்லை!

 

Dato' Sri Dr Ahmad Zahid Hamidi
நமக்குத் தெரிந்தவரை அதாவது மக்களைப் பொறுத்தவரை மாண்புமிகு ஸாஹிட் ஹமிடி, நமது நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அமைச்சரவையில்  துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  அத்தோடு கூடுதலாக கிராமப்புற மேம்பாடும்   அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது தான் அவரது அமைச்சின் கீழ் உள்ள  அவரது பொறுப்புகள்.

ஆனால் ஏனோ  தனக்குச் சம்பந்தமில்லாத பொறுப்பை அவரே கையில் எடுத்துக் கொண்டு  தேவையற்ற ஒரு சூழலை இன்று மலேசிய இந்தியரிடையே ஏற்படுத்தியிருக்கிறார். இந்தியருக்கும் இவருக்கும் எந்த அளவில் புரிந்துணர்வு இருக்கிறது  என்பது இந்தியர்களுக்குப் புரியாமல் இல்லை! ம.இ.கா. வை எந்த அளவுக்கு  அவர் கடிந்து பேசியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  அவர்களை மனிதர்களாகக் கூட அவர் மதிக்கவில்லை! இந்தியர்களிடம் அவருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது நமக்குத் தெரியும்!

ஆனால் தீடீரென்று, அவருக்குச் சம்பந்தமில்லாத "இந்தியர் நலன்" என்கிற ஒன்றை எடுத்துக் கொண்டு  அதற்கு ஒருவரை நியமித்துவிட்டு  "இவர்தான் இந்தியர்களின் சிறப்பு அதிகாரி" என்று ஒருவரைக் கை நீட்டுவது, இல்லை! அது சரியானதாக இல்லை! என்பது தான் நாம் சொல்ல வருவது. ஸாஹிடி ஏதோ விளையாட்டு விளையாடுகிறார் என்று தெரிகிறது. ஏற்கனவே பழங்குடி மக்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறீர்கள் என்பது மலேசியர்களுக்குத் தெரியும்.  அது நீங்கள் தலைமை தாங்கும் அம்னோவின் தொடர் விளையாட்டு! அதனை இப்போது, அதே விளையாட்டை இப்போது, இந்தியருக்கும் காட்ட வேண்டும் என்று நினைக்கீறீர்கள்!

இந்தியர் பிரச்சனையைக் கையில் எடுத்தவர் அன்வார். தேர்தல் காலங்களில் அவரே தனது பிரச்சாரங்களில் அதனைக் கூறியிருக்கிறார். அன்வாரை நம்பியே இந்தியர்களின் வாக்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு சுமார் 85 விழுக்காடு ஆதரவு கிடைத்திருப்பதை  உறுதியாக நம்பலாம். ஆமாம், அந்த அளவுக்கு ம.இ.கா.வின் மேல் ஏற்பட்ட வெறுப்பு நம்பிக்கைக் கூட்டணிக்கு  நம்பிக்கை தரும் வாக்குகளாக மாறிவிட்டன.

இந்த நிலையில் தீடீரென இந்தியர் பிரச்சனையைப்பற்றி ஸாகிட் ஹாமிடி பேசுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்தியரைப்பற்றி பேசுவது அவரது அரசியலல்ல. அவரது அரசியல் என்பது பூமிபுத்ரா அரசியல் மட்டும் தான்.  அவர்களுடைய அரசியலைத்தான் அவர் சுற்றிச் சுற்றி வருவார்! அங்கு தான் அரசியல் பலம், அரசியல் செல்வாக்கு - அனைத்தையும் விட அரசியல் அதிகாரம், அரசியல் சக்தி அவர்களின் அம்னோவில் தான் உள்ளது. அதனால் அவருக்கு இந்தியர்களின் மேல்  எந்த கரிசனமும் இருக்க வாய்ப்பில்லை!

அதனால் துணைப்பிரதமரின் அறிவிப்பு என்பது அல்லது நியமனம் என்பது அது எந்த வகையிலும் மலேசிய அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கியது அல்ல என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளுகிறோம்.

இந்தியர்கள் விரும்புவது பிரதமர் அன்வார் கீழ் வருவதையே!

No comments:

Post a Comment