Monday 26 December 2022

மீண்டும் ம.இ.கா. வா?

 

                          இந்திய சமூகத்தின் சிறப்பு அதிகாரி: ரமேஷ் ராவ்

பிரதமர் அன்வார் அவர்களின் நியமனம் என்று நான் சொல்ல மாட்டேன்! எப்படியோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நியமனம்!

துணைப்பிரதமராக  ஸாஹிட் ஹமிடியை  நியமித்ததில் நமக்கு ஆட்சேபணையில்லை. அது ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவிதி. அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் நமக்கு ஹமிடி மேல் எந்த நல்லெண்ணமும் இல்லை. அவர் இந்தியர்களைப் புறந்தள்ளியவர். ஒதுக்கி வைத்தவர். அவரின் அமைச்சுக்குக் கீழ் இந்தியரின் விவகாரங்கள் அமைய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது! அது இந்தியர்களைக் கிண்டல் செய்வது போல உள்ளது!

தேசிய முன்னணி எல்லாகாலங்களிலும் இந்தியர்க்கு எதிரான கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து ம.இ.கா.வும் செயல்பட்டு வந்திருக்கிறது. இரு கட்சிகளுமே கூட்டுக் களவாணிகள்!

இப்படி  இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட  ம.இ.கா. என்னும் பேரழிவை இப்போது ஸாஹிட் ஹமிடி அந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரையே சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பது எந்த வகையிலும் நியாயமாகத் தெரியவில்லை! அதற்கு ஏதோ ஒரு பின்னணி இருக்க வேண்டும். ஆனால் அது நமக்குத்  தேவையில்லை!

நமது தேவை என்பது இந்தியர் விவகாரங்கள்,  பிரதமர் துறையின் கீழ் வரவேண்டும்.  அது தான் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அங்கும் ஏதோ ஒருவரையல்ல. அங்கும் குறைந்தபட்சம் துணை அமைச்சர் தகுதியில்  ஒருவரை நியமிக்க வேண்டும்.

 இப்போது, நம்மைப் பொறுத்தவரை, இந்த துணைப்பிரதமரின் கீழ் இந்தியர்க்கான   சிறப்பு அதிகாரி நியமனம் என்பதெல்லாம் இந்திய சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது!  ஏற்கனவே சொன்னது போல இது போன்ற நியமனங்கள் இந்தியர்களைக் கேவலப்படுத்துவதற்குச் சமம்!  அதுவும் ஹமிடி போன்றவர்கள் இந்தியர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம்  இந்தியர் விவகாரங்கள் பிரதமர் துறையின் கீழ் வரவேண்டும். அதன் அதிகாரிகளாக நிச்சயமாக ம.இ.கா.வினர் வரவே கூடாது. கட்சி சார்பற்றவராகக் கூட இருக்கலாம். ஆனால் சமுதாயத்தை அறிந்தவராக இருக்க வேண்டும்.

இந்தியர் விவகாரங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள்ள பிரச்சனைகள் ஏராளம். பிரச்சனைகளை  அணுக, தீரக்க நல்ல திறமையாளர்கள் தேவை. இதனை ஏதோ ஒர் அதிகாரியைப் போட்டால் போதும் என்றால் அடுத்த  ஐந்து  ஆண்டுகளை வீணடிப்பதாகும்.  எதுவும் ஆகப்போவதில்லை! நாம் யாரை  வேண்டாம் என்கின்றோமோ  மீண்டும் மீண்டும் அவர்களைக் கொண்டு வந்து நம் கண்முன் நிறுத்தினால் நிச்சயமாக மக்களின் வரிப்பணம் பாழ்!

இந்த நியமனம் வீணடிப்பே!

No comments:

Post a Comment