Saturday 17 December 2022

அன்வாருக்கு ஆதரவு!

 

ஒற்றுமை அரசாங்கம் அமையும் என்று பேசப்பட்ட போது அதனை யாரும் நம்பவில்லை! அப்போதே முன்னாள் பிரதமர் முகைதீன் தனது எதிர்ப்புக்குரலை எழுப்பினார்! முகைதீன் ஏற்கனவே நன்றாக நடந்து கொண்டிருந்த அரசாங்கத்தை கவிழ்த்தவர்! அதனால் அவர் சொல்லுவதை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. கவிழ்ப்பதில் சுகம் கண்டவர்!

ஒற்றுமை அரசாங்கம் அமைந்து ஒரு மாதம் நெருங்கிவிட்டது. வருகிற 19-ம் தேதி, திங்கள் கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான நமபிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்படும்  என்பதை பிரதமர் அப்போதே அறிவித்துவிட்டார்.

ஆமாம், நம்பிக்கைத் தீர்மானம் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர் முகைதீன் , இஸ்மாயில்  இருவரும் பிரதமர்களாக இருந்தபோது  நடந்த கூத்தடிப்புகள் இன்னும் நினைவில் நிற்கின்றன! தங்களது அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக பலருக்குப் பதவிகள் தாராளமாக அள்ளி அள்ளிக்  கொடுத்தனர்!  பதவிகளோடு பணமும் துள்ளி விளையாடியது! அதனல் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்பட்டது.   மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது என்பது பற்றி ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!  அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்! அவர்கள் நோக்கமே கொள்ளையடிப்பது தானே!

இப்போது இன்னும் சில விஷயங்கள் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. ஆமாம், கோவிட் 19 வை வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. எல்லாம் மக்கள் பணம். கேட்க நாதியில்லை!

இவ்வளவு பிரச்சனைகளுக்குக் காரணம் பொறுப்பான ஓர் அரசாங்கம் இல்லை! பொறுப்பற்ற அரசாங்கத்தில் கொள்ளையடிக்கும் கூட்டம்!

ஒற்றுமை கூட்டணியில்  பங்கு பெற்றிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களின் பிளவுபடாத ஆதரவை பிரதமர் அன்வாரின் நடப்பு அரசாங்கத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் எந்தத் தடையுமின்றி தனது பணிகளைச் செய்ய எந்த ஒரு முட்டுக்கட்டையும் இராது என்பது உறுதி. 

நாட்டுக்குத் தேவை நிலையான அரசாங்கம். இலஞ்சம், ஊழல் இல்லாத அரசாங்கம். விலைவாசிகளைக் கட்டுப்படுத்துதல். மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள். இப்படி பல வகைகளின் மலேசியர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய குறைபாடுகள் உள்ளன. இவைகள் எல்லாம் களையப்பட வேண்டும்.  அதனை சரிசெய்வதற்கு ஒற்றுமை அரசாங்கத்தால் முடியும்.  பிரதமர் அன்வார் தலைமையில் அது முடியும் என்பதே மக்களின் கணிப்பு.

இந்த எதிர்கட்சிகளின் ஒப்பந்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு  நல்ல பயனை அளிக்கும் என நம்பலாம்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment