Wednesday 21 December 2022

ஏன் இந்த இழிநிலை?

 

மலேசியாவில் நமது இந்திய இனம் - இந்தியர் என்று சொன்னாலும் - அது தமிழர்களைத்தான் குறிக்கும் -  மிகவும் ஒரு தாழ்வான நிலைக்குத் தாழ்ந்து போனதற்கு யார் காரணமாக இருக்கக் கூடும்?

நாம் யார் யாரையோ குற்றம் சொல்லலாம். ஆனால் முக்கியமான பொறுப்பு என்றால் அது அரசாங்கத்தைத்தான் சாரும். தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு மிகப் பெரியத் தடை  என்பது அரசாங்கம் தான்.

மலாய் மக்களின் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு அரசாங்கம் தானே காரணம்? சரியான திட்டம் போட்டு, திட்டங்களை நிறைவேற்றியதால் தான் இன்று இந்த அளவுக்கு வளர்ச்சியை அவர்கள்  பெற்றிருக்கிறார்கள்.

தமிழர்கள் மட்டும் ஏன் வளர்ச்சி அடைய முடியவில்லை! நாட்டில் இருக்கிற அனைத்து இனங்களும் சேர்ந்து வளரும் போது தான் அது வளர்ச்சியாக இருக்கும். ஆனால் நடந்தது என்ன? ஓர் இனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக  தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை.  நமக்கு எந்த வளர்ச்சியும் தேவை இல்லை என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் நினைத்ததால் தான் இன்று நமது சமூகம் ஏழ்மையில் தள்ளப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. தனியார் துறைகளில்  கீழ் மட்டமான வேலைகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டன. வேலை இல்லாததால் சிறைகள் அதிக இந்தியர்களைக் கொண்டிருக்கின்றன! ஆமாம் அவர்கள் என்ன செய்வார்கள்?  கல்வியில் பல்வேறு துறைகளிலும் புறக்கணிப்பு. மேற்கல்வி  என்றாலே நமக்கு இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. அரசாங்கக் கல்லூரிகளில் வாய்ப்புகள் கிடைத்தால் குறைவான கட்டணம்.  இந்திய சமூகத்திற்கு அதுவே பொறுத்தமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் தங்கள் சொந்தப்பணத்தில் படிக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கிடைத்த வேலைக்குப் போக வேண்டும். அது தான் நடந்தது. கிடைத்த வேலைகளுக்குப் போனார்கள்.

நல்ல கல்வியாளர்களைக் கொண்ட ஒரு சமூகம் நாம்.  இதுபோன்ற புறக்கணிப்பால் நமது இளைஞர்கள் கீழ்நிலை வேலைகளைச் செய்யும் ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது.

கல்வி, வேலை வாய்ப்பு - இந்த இரண்டுமே இல்லாத ஒரு சூழல் என்றால் இந்த சமூகம் என்னவாகும்? அது தான் இன்று நம்மை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டது. இன்று குடும்பம் குடும்பமாக வீதிகளில் தள்ளப்பட்டவர்கள் யார்? வீடு இல்லை! வேலை இல்லை! அவர்கள் வீதிக்குத்தானே வரவேண்டும்? பிச்சை தானே எடுக்க வேண்டும்? வேறு என்ன அவர்களால் செய்ய முடியும்?

நல்ல அரசாங்கம், நல்ல தலைவர்கள் இல்லாத ஒரு சமூகம் என்றால் அது இந்திய சமூகம் தான்.  நல்லது, கெட்டது கேட்க ஆளில்லை! அதனால் தான் இன்று நமக்கு இந்த இழிநிலை!

No comments:

Post a Comment