Monday 19 December 2022

ஆதரவை பெற்றார் அன்வார்!

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் மீதான நம்பிக்கை தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது  மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

இப்படி ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தவரே எதிர்கட்சியைச்  சேர்ந்த முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தான். "நாடாளுமன்றத்தில், அன்வார், நம்பிக்கை வாக்கெடுப்பை  சந்திக்க தயாரா?" என்று  சவால் விட்டவர் முகைதீன். "சந்திக்க தயார்!" என்று அன்றே பிரதமர் அன்வார் அவருக்குப் பதில் கொடுத்துவிட்டார்.  அன்று  அந்த வாய்ப்போரினால் ஏற்பட்டது தான்  இந்த வாக்கெடுப்பு.

நாம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. முகைதீன் கேட்டதிலும் நியாயமுண்டு.  அன்வார் தனது பலத்தை நிருபிக்க வேண்டியது அவரின் கடமை. அதனைத் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் செய்தார். ஆனால் முகைதீன் எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது! வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அன்வாருக்கு கிடைத்ததில் முகைதீன் மகிழ்ச்சி அடையவில்லை! அதனால் தான் அவரது கட்சியினர் நாடாளுமன்றத்தின் முதல் நாளே  பிரதமர் அன்வாரை அவதூறாகப் பேசி அவரைக் கேவலப்படுத்தினர்!  நாமும் அவர்களைப் புரிந்து கொள்ளுகிறோம். அது கையாலாகதவனின் பேச்சு என்பது நமக்குப் புரிகிறது! விரக்தியால் பேசுவதை  அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்க வேண்டியது தான்!

நாடாளுமன்றத்தில்  அதீதமான ஆதரவு கிடைத்த பின்னர் அடுத்த என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது! மீண்டும் மீண்டும் "உனது பலத்தை நிருபிக்க முடியுமா?" என்கிற கேள்விகள் எழாது! இனி பிரதமர் தனது வேலைகளைக் கவனிக்கலாம். அவர் கவிழ்த்திடுவார்! இவர் கவிழ்த்திருவார்! என்கிற அச்ச உணர்வு தேவையில்லை!

இதற்கு முன்னர் நடந்த இரண்டு அரசாங்கங்களில், "எப்போது யார் கவிழ்ப்பார்!  அவன் கவிழ்த்துவிடுவானா! இவன் கவிழ்த்துவிடுவானா! கவிழாமல் இருப்பதற்கு யாருக்குப் பதவி கொடுக்கலாம்! யாருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம்!" இப்படித்தான் அந்த முகைதீன், இஸ்மாயில் அரசாங்கங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன! அந்த அரசாங்கங்களினால் அவர்களுக்குத்தான் இலாபம்! மக்களுக்கு எந்த வகையிலும் இல்லை!

ஆனால் இப்போது அது போன்ற பிரச்சனை எழ வாய்ப்பில்லை. நாட்டின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் தீட்டி மக்களின் வாழ்க்கை சூழலை உயர்த்த வேண்டும். வெறும் அரசியல் நடத்துவதற்கு இப்போதைய பிரதமர் தயாராக இல்லை. ! மக்களின் நலனை அவர் முன் வைக்கிறார். வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும், மூடிக்கிடக்கும் நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும், விலைவாசிகள் குறைய வேண்டும் என்று இப்படி பல பிரச்சனைகளோடு களம் காண்கிறார் நமது பிரதமர்.

இந்த அபரிதமான ஆதரவு என்பது அடுத்த ஐந்து ஆண்டுகள்   நாட்டு மக்களுக்கு நல்ல சேவையைச்  செய்ய பிரதமருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என  எடுத்துக் கொள்ளலாம்.

நம்மைப் பொறுத்தவரை நாட்டு நலனே முக்கியம்! பிரதமர் அன்வார் காலத்தில் நாட்டின் முன்னேற்றம் வெற்றிகரமாக இருக்கும் என நிச்சயமாக நம்பலாம்!

No comments:

Post a Comment