Monday 11 September 2023

தலையெழுத்தா? கையெழுத்தா?

 

                                                            நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்துவின் மரணம் என்பது அதிர்ச்சியான சம்பவம் தான். மரணத்தை யாரும் எதிர்பார்ப்பதில்லை.  எப்படி வரும் எப்போது வரும் எதுவும் நம் கையில் இல்லை.

சமீப காலத்தில் தான்  அவரது சினிமா பயணம் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது. பல ஆண்டுகள் சினிமா உலகில் போராடிய அவருக்குக் கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகத்தான்  நல்ல காலம் பிறந்தது. அந்த நல்ல காலமே அவருக்குக் கெட்ட காலமாகவும் அமைந்துவிட்டது. காரணம் ஒயவு இல்லாமல் பணிபுரிந்ததின் விளவு தான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சினிமா உலகில் நுழைபவர்கள் ஏதோ ஒரு திறமையை வைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் திறமை எதுவும் அவரிடம் இல்லை. அதற்காக அவர் தன்னைத் தயார் செய்து கொள்ளவும்  இல்லை.

ஆனால் ஒரு திறமை இருந்தது. அதுவோ பள்ளியில் கற்றது. எழுதும் போது தனது கையெழுத்தை மிக அழகாக, நேர்த்தியாக எழுதும் கலையை அவர்  கற்றிருந்தார். அந்தக் கலை தான் அவருக்குச் சினிமா உலகில் அவர் நுழைவதற்குக்  காரணமாக அமைந்தது.

அவருடைய கையெழுத்து,  பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவை, கவர்ந்ததால் அவரைத் தனது உதவியாளராக  வைத்துக் கொண்டார்.  பின்னர் நடிகர்/தயாரிப்பாளர் ராகிரண்  அவரும்  அவருடைய கையழுத்தைப் பார்த்து  தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ஆக, இங்கிருந்து தான் அவரது சினிமா  பயணம்  ஆரம்பமாகியது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. இவருக்கோ இவரது நேர்த்தியான  எழுத்தே இவருக்குத் திறமையாக அமைந்து  அதுவே சினிமா உலகத்தின்  நுழைவாயிலாக அமைந்துவிட்டது!  அசல் தட்டச்சு  போலவே  இருக்குமாம் அவரது கையெழுத்து. அதுவும் ஒரு திறமை தானே! 

 தலையெழுத்து  சரியாக இருந்தால்  வாழ்க்கை எழுத்து  சரியாகவே  அமையும் என்பார்கள்.  கையெழுத்தை யார் பார்த்தார்? அது எப்படி இருந்தால் என்ன என்பது தான் நமது எண்ணம். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களது  கையெழுத்துக் கூட அவரது முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. அதில் ஒருவர் தான் மறைந்த நடிகர் மாரிமுத்து.

உலகில் பலருக்குக் கையெழுத்து சரியாக அமைவதில்லை.  ஆனால் அவர்களில் பலர் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.  உலகம் தலையெழுத்துக்குத்தான் மரியாதைக் கொடுக்கிறது.  கையெழுத்துக்கு உரிய மரியாதை இல்லை.

அதற்காக உங்களது கையெழுத்தைக் கன்னாபின்னா வென்று எழுதாதீர்கள். அழகாக, நேர்த்தியாக எழுதிப் பழகுங்கள். கையெழுத்து நேர்த்தியாக இருந்தால் தலையெழுத்தும் நேர்த்தியாக அமையும்.

நடிகர் மாரிமுத்துவுக்கு அவரது கையெழுத்து தான் அவரது வாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டியது! இது அனைவருக்கும் பொருந்தும்!

No comments:

Post a Comment