Friday 15 September 2023

அளவுக்கு மிஞ்சினால்......!

 


அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொன்னது தான்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

சமீபத்திய  செய்தி  ஓன்றைப் படித்த போது  நம் இளம் வயதினர்கள் எந்த அளவு  தங்கள் உடல் நலனில் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 ஒர் இளம்  பெண்  சுவை பானம் அருந்துவதில் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்  அதனால் எப்படி தனது உடல் நலனைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியும் போது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.

அந்தப் பெண்  ஒவ்வொரு நாளும் நான்கு பாட்டல் சுவைபானம் அருந்துவதை வழமையாகக் கொண்டிருந்திருக்கிறார். தொடர்ந்தாற் போல ஆறு ஆண்டுகள். அதன் பின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனைக்கு செல்கின்றார். நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பது தெரிந்தது. மேலும்  சோதனைகள்.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 27 என்று தெரிய வந்தது. இப்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில்  சிகிச்சைப் பெற்று சர்க்கரையின் அளவு 7 என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது.  இப்போது உணவு கட்டுப்பாடுகள், மருந்து மாத்திரைகள்,  சுவை பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு  இயல்பான வாழ்க்கை வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப் பெண்ணுக்கு வயது 22 என்பது தான் அதிர்ச்சியான செய்தி.  இந்த வயதில்  அவர் பல துன்பங்களை அனுபவித்து விட்டார். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வெளியே இருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாமல்  அவதிப்படுவது,  உடல் எடை திடீரென  92 கிலோகிரேமிலிருந்து  84 கிலோகிரேமாக  குறைந்தது, தலையில் ஏற்பட்ட காயம் ஆறாமல் சீழ்வடியத் தொடங்கியது - இப்படியே பல துன்பங்களை அனுபவித்து விட்டார்.

கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு சிலர் தண்ணீரைக் குடிப்பதை கௌரவக் குறைவாக நினைக்கின்றனர். சுவை பானங்கள் அருந்துவதில் பெருமையாகக் கருதும் எருமைகளும் இருக்கின்றனர். ஏன்? எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மதியம் உணவு முடிந்த பின்னர் சுவை பானத்தைத் தான் அருந்துவார். அவருக்கு நாம் புத்தி சொல்லுவது?

சுவை பானங்களை அளவுக்கு மீறி பயன்படுத்தாதீர்கள். அது உடல் நலத்துக்குக் கேடு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.  இன்று அந்தப் பெண். நாளை....? நீங்களாக இருக்கலாம்!

No comments:

Post a Comment