Thursday 7 September 2023

நன்றி! அனுமதித்தற்காக நன்றி!

 

பல நீண்ட கால போராட்டத்திற்குப் பின்னர் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது!   மனிதவள அமைச்சிற்கு நன்றி.

முடிதிருத்தகம், பொற்கொல்லர், ஜவுளி நிறுவனங்கள் இவர்களுக்காக மனிதவள அமைச்சு சுமார் 7500 வெளிநாட்டுத்  தொழிலாளர்களை வருவிக்க அனுமதி அளித்திருப்பது நமக்கு மகிழ்ச்சி தான்.

இப்படி ஒரு நல்ல செய்திக்காக மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் பல ஆண்டுகாலம்  போராட்டங்களை  நடத்தி வந்திருக்கின்றனர்.  அரசாங்கத்தின் அனுமதி  சும்மா கிடைத்து விடவில்லை.  எத்தனையோ முறை பேச்சுவார்த்தைகள். மாறி மாறி வந்த அரசாங்கங்கள். மாறி மாறி வந்த அமைச்சர்கள்.  அனைவருமே 'இதோ இப்போ! அதோ அப்போ!'  என்கிற ரீதியில் தான் போய்க் கொண்டிருந்தனவே தவிர  எந்த ஒரு  அமைச்சராலும் சொன்னபடி நடந்து கொள்ள முடியவில்லை. அவர்களை நம்மால் குறை சொல்ல முடியாது. அரசாங்கத்தின் அன்றைய கொள்கை என்னவோ அதைத்தான் அவர்களால் செய்ய முடியும்; பேச முடியும்.

இன்று என்னவோ நல்ல காலம்.  பிரதமர் அன்வார், இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருப்பார் போல் தோன்றுகிறது. அதனால் இந்த நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.  இதற்கு முன்னர் உள்ள மனிதவள அமைச்சர்களை மறந்துவிடுவோம்.  இன்று, இன்றைய  மனிதவளை அமைச்சர்  மாண்புமிகு வி.சிவகுமார் அவர்கள் காலத்தில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. அவரைப் பாராட்டுவோம். அவரது முயற்சிகளைப் பாராட்டுவோம்.

ஆனால் எல்லாவற்றையும் விட இந்த நிறுவனங்கள்  அரசாங்கத்தின் இந்த முடிவை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதனைத் தக்க வைத்துக் கொள்வது அவர்களது கடமை.

பொற்கொல்லர் நிறுவனங்கள்  மீது குற்றம் சொல்ல இயலாது.  அந்தத் தொழிலில் கண்டவர்கள் எல்லாம் வரமுடியாது. தொழில் தெரிந்தவர்கள் மட்டுமே வர முடியும்.  ஜவுளி நிறுவனங்கள் பற்றி நமக்குத் தெரியவில்லை. ஆனால் முடிதிருத்தகங்கள் பற்றி அங்கு வேலை செய்பவர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பது ஓரளவு நமக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்களது தொழிலாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது அவர்கள் கையில் தான் இருக்கிறது. 

பல நிறுவனங்கள்  தொழிலாளர்களின் நலனின் அக்கறை காட்டுவதில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகளை இந்த நிறுவனங்கள் பல துயர்களுக்கு உள்ளாயின. குறை சொல்ல வேண்டுமானால் சொல்லலாம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது நமது நோக்கமல்ல.  இனி உங்கள் புத்திசாலித்தனம் அவ்வளவு தான்.

நமது அறிவுரை எல்லாம் அரசாங்கம் கொடுத்திருக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  மீண்டும் மீண்டும் இதே பிரச்சனையைப் பற்றிப் பேசி காலந்தள்ளாதீர்கள்.  எப்போதும் அரசாங்கம் உதவும் என்று கணக்குப் போடாதீர்கள்.

இப்போது நல்லது நடந்திருக்கிறது. பாராட்டுவோம்! நன்றி!

No comments:

Post a Comment