Monday 25 September 2023

இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்வதில்லையா?


இளம் வயதினர்,  13 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 180,000 மாணவர்கள் பள்ளி செல்வதில்லை என்கிற செய்தி உண்மையில் அதிர்ச்சியான செய்தியாகத்தான் நான் கருதுகிறேன்.

இதனை மலாயா பல்கலைக்கழகத்தின் "ஸ்டெம்" இயக்குநர் டாகடர் சஹிதாயான் முக்தார்  அறிவித்திருக்கிறார். மிகவும் வருத்தமான செய்தி.

பள்ளிக்குப் போகவில்லை என்பதற்காக அவர்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட முடியாது.  ஏதோ ஒன்று அந்த மாணவர்களைப் பள்ளி செல்ல முடியாமல் தடுக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

ஏழ்மை என்று சொல்லலாம், கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத பெற்றோர், இளவயது திருமணங்கள், குடிகாரப் பெற்றோர் - இப்படி பல காரணங்கள்.  இங்கும் புள்ளி விபரங்களைச் சேர்த்தால் நமது தமிழ் மாணவர்கள் தான் முதன்மையாக இருப்பர்.

நமது பெற்றோர்கள் சொல்லுகின்ற காரணங்கள் சரியானதாகவும் இருக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். பள்ளிகள் அருகிலேயே இருக்கலாம். அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். கொஞ்சம் தூரமாகவும் இருக்கலாம்.  "பஸ் ஸ்கோலா"  கட்டணம் கட்ட முடியவில்லை என்பார்கள். இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் பஸ் கட்டணம் உண்மையாகவே கட்ட முடியாது தான்.  பண பலம் இல்லதவர்களின் நிலையை நாம் உணரத்தான் செய்கிறோம்.

பள்ளிக்குச் செல்லாத இந்த மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய விருக்கிறோம்?   நிச்சயமாக தொழில் பயிற்சிகள் பல உண்டு.  அரசாங்கம் ஏகப்பட்ட பயிற்சி  நிலையங்களை திறந்து வைத்திருக்கிறது. என்ன பயிற்சி நமக்கு வேண்டுமோ அந்தப் பயிற்சிகளைப் பெற  எல்லா வாய்ப்புக்களும் உண்டு.

நம்முடய தேவை எல்லாம் இந்த செய்திகள் முதலில் பெற்றோர்களுக்குச் சேர வேண்டும் அடுத்து மாணவர்களுக்குச் சேர வேண்டும். பல பெற்றோர்கள் அதுவும் கீழ் தட்டிலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வெளியே போனால் கெட்டுப் போவார்கள்  என்கிற எண்ணத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள். அதெல்லாம் உடைத்து எறிய வேண்டும்.

இன்றைய நிலையில் ஓரளவு விபரம் தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது கோவில்கள் பெரும் பங்காற்ற வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  எனக்கு என்ன கிடைக்கும்? என்கிற கேள்விகளையெல்லாம் எழுப்பக்கூடாது!

சுயநலம் போதும்! கொஞ்சம் பொதுநலமும் வேணும்!

No comments:

Post a Comment