Tuesday 26 September 2023

பெருமகனார் துன் வீ.தி.சம்பந்தன்!

 

       நன்றி: வணக்கம் மலேசியா

துன் என்றால் அது துன் வீ.தி.சம்பந்தன் அவர்களைத்தான் நமது தமிழ்ச்சமுதாயம் நினைவு கூரும். அந்த இடத்தைப் பிடிக்க வேறு யாராலும் முடியாது.

நண்பர் மணிமாறன் கிருஷ்ணன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள  "விண்ணில் மறைந்து மண்ணில் வாழ்கிறார்  துன் வி.தி. சம்பந்தன்"  என்கிற  அந்த நூலை இன்னும் படிக்கவில்லை என்றாலும் அவரைப்பற்றி வேறு நூல்கள் அல்லது கட்டுரைகள் நிறையவே படித்திருக்கிறேன்.

உண்மையைச் சொன்னால்  துன் அவர்கள் மலேசிய அரசியலில் பெரும் சாதனையாளர். அதுவும் இந்தியர்களைப் பொறுத்தவரை அவர் செய்திருக்கும் சாதனைகளை வேறு யாரும் செயததில்லை.

அவருக்குப் பின்னர் வந்தவர்கள் யாவரும்  'வாயடி வீரர்கள்' ஆகத்தான் இருந்தார்களே தவிர இந்திய சமுதாயத்திற்கு சோதனையாளர்களாகத்தான்  இன்னும் இருக்கின்றனர்!

அவர் ஆரம்பித்து வைத்த கூட்டுறவு சங்கம் ஒன்றே இன்றுவரை தனிப்பட்ட பெரும் வர்த்தக நிறுவனமாக, இந்தியர்களின் சாதனை நிறுவனமாக, பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.  தலைநகரிலுள்ள ம.இ.கா. கட்டடம் என்பது அவர் கட்டியது தான். இந்நாட்டில் உண்மையான, இந்தியர்களின் தூணாக விளங்கியவர்.

ஆனால் இன்றைய நிலை என்ன? அவருடைய சாதனைகள் தொடரப்படவில்லை. அதில் யாரும் அக்கறை காட்டவில்லை. கேட்டால் ஏம்ஸ்ட் இருக்கிறது, டேஃ கல்லூரி இருக்கிறது (இவைகள் என்ன ம.இ.கா. சொத்தா?), கோவில்களுக்கு உதவினார், பள்ளிகளுகளுக்கு உதவினார், கல்விக்கு உதவினார் என்று எத்தனை பெரிய பட்டியல் போட்டாலும்  கடைசியில்  மைக்கா ஹோல்டிங்ஸ் ஸுக்கு ஏன் உதவவில்லை என்றால்  அத்தனையும் ஒடுங்கிப் போய் விடுகிறது! இது ஒன்றே போதும். ம.இ.கா.  என்றும் தலைதூக்க முடியாத  அளவுக்கு  இந்தியரிடையே மனதில் ஆழப் பதிந்துவிட்டது! யார் என்ன செய்ய? இன்னும் குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன!

இந்த நேரத்தில் ஏன் இவர்களைப்பற்றி எழுதுகிறோம்? துன் சம்பந்தன் ம.இ.கா.வை இரும்புக்கோட்டையாக வைத்துவிட்டுப் போனார். இவர்கள்  இரு இரு கோடாகப் போட்டு , இருபது கோடுகளாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்!

துன் அவர்கள் பிறக்கும் போது பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். கட்சிக்காக தனது சொத்துகளை   இழந்தவர்.  தோட்டப்புற பாட்டாளிகளுக்காக வாழ்ந்தவர். கடைசிவரை ஏழைகளின் துயரத்தை அறிந்தவர்.

அவரது பெயர் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். மறக்க முடியாத மாமனிதர் துன் அவர்கள். என்றென்றும் வாழ்க அவர் நாமம்!

No comments:

Post a Comment