Sunday 3 September 2023

கடுமையான ஒழுங்குமுறை!

 

ஒரு காலகட்டத்தில் காவல்துறை நமது இளைஞர்களுக்கு மிகவும் விரும்பிய துறையாக இருந்தது.

ஆனால் இப்போது என்னவோ அந்தத் துறையும்  நமது இளைஞர்களுக்கு  கசக்க ஆரம்பித்துவிட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது!  நமது இளைஞர்கள் விரும்பியபோது காவல்துறை நம்மைவிட்டு விலகி நின்றது. இப்போது காவல்துறை வேண்டும் என்கிற போது நமது இளைஞர்கள் விலகி நிற்கின்றனர்!

சமீபத்தில் காணொளி ஒன்றில் காவல்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பேச்சினை நண்பர் மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தார்.

ஆமாம். இந்திய இளைஞர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். நேர்காணலுக்கு வருகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள்.  எல்லாமே சுபமாகத் தான் முடிகிறது. ஆனால் தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரிரு வாரங்களில்  "எனக்கு இந்த வேலை  சரிபட்டு வராது! நான் போகிறேன்! என் பெற்றோர்களைக் கேட்க    வேண்டும்!"  என்று சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் பல இளைஞர்கள் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியவர்கள்,  இந்த இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பினால்,  அவர்களும் வாய்ப்பினை இழந்து போனார்கள். இது தான் பிரச்சனை. இவர்கள் வேண்டாம் என்று இடையிலேயே ஓடிப்போனால் அந்த  இடம் மீண்டும் நிரப்பபடுவதில்லை. இப்படிப் பல இந்திய இளைஞர்களின் வாய்ப்புகள் வீணடிக்கப்படுவதாக  அவர் கூறியிருந்தார்.

காவல்துறை  சம்பந்தமான  வேலைகளுக்குச் சில கெடுபிடிகள் இருக்கத்தான் செய்யும். கடுமையான பயிற்சிகள். கடுமையான நெறிமுறைகள். ஒழுங்குமுறைகள்  என்று பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கத்தான்  வேண்டும். இதற்கெல்லாம் பயப்படுவர்கள்  காவல்துறை பக்கம் எட்டிப்பார்க்கூடாது. ஆனால் போகும் போது பெரிய வீராப்போடு  போவதும் பின்னர் "நான் வீட்டுக்குப் போறேன்!" என்று அழுவதும் - இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல.

காவல்துறையைத் தேர்ந்தெடுத்தால்  உறுதியாக இருங்கள். வீதிகளில் சண்டை போடுவதை வைத்து உங்கள் வீரத்தை மதிப்பிடாதீர்கள். நீங்கள் பயிற்சியின் போதே விலகினால் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்களைப் போன்ற இன்னொரு இளைஞனின்  எதிர்காலத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் விண்ணப்பம் செய்து, நேர்காணலில் பங்குப் பெற்றிருக்காவிட்டால்  யாரோ ஒரு இந்திய இளைஞனுக்கு அந்த இடம் கிடைத்திருக்கும். 

இளைஞனே கேள்! நமக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். வீரனாகப் போய் கடைசியில் கோழையாக வெளியே துரத்தடிக்கப்படுவது  மிக் மிக அற்பத்தனம். கோழைத்தனத்தின் எல்லை!

No comments:

Post a Comment