Wednesday 1 November 2023

தீபாவளி சிக்கனம்!

 

வருடத்திற்கு ஒரு முறை வருவது தீபாவளி. எம்மாம் பெரிய விஷேசம். அதனை எப்படி சிக்கனமாகக் கொண்டாடுவது?  இதெல்லாம் நடக்கிற காரியமா?  அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பெருநாளை, வருஷத்திற்கு ஒரு முறை வரும் பெருநாளை ஆடிப்பாடி அகமகிழ்வது தானே முறை! அதனால்  கூடி மகிழ்வோம்!  கொண்டாடுவோம்! குதுகளிப்போம்!

ஆனால் மகிழ்வதற்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. முக்கியமாக குழந்தைகளுக்குப்  பெருநாள் காலங்களில் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள். அதைத் தவிர்க்க முடியாது.  அந்த மகிழ்ச்சியை நம்மால் கொடுக்க முடியும்.  அதற்கெல்லாம் பெரிய அளவு கடனை உடனை வாங்கித்தான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்பதில்லை.

பொதுவாக நாம் எப்போதும் சொல்லுவது போல எல்லாவற்றுக்கும் ஒரு பட்ஜெட் தேவை. பட்ஜெட் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை.  எந்த அளவுக்கு நாம் செலவு செய்ய முடியும்,  என்ன என்ன பொருள்கள் நமக்குத் தேவை - இப்படி  வாங்கும்  ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும்  என்று ஒரு வரையரையை வகுத்துக் கொண்டால் முடிந்தவரை அதற்குள்ளேயே  நாம் செயல்பட  நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.  ஒரு திட்டம் இல்லாவிட்டால் இருக்கிற கொஞ்ச நஞ்ச பணமும் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!

முன்பெல்லாம் தாராளமாக செலவு செய்ய வேலை இருந்தது, வருமானம் வந்தது அதனால் செலவு பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆனால் நிலைமை மாறி வருகிறது.  நாளையே எந்த வருமானமும்  இல்லாமல் போகலாம். அதனால் சிக்கனம் நிச்சயம் தேவை. பண இருப்பு அவசியம் தேவை.  பிள்ளைகளைப் பட்டினி போட முடியாது.  ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக  இருக்கிற பணத்தையெல்லாம்  காலி செய்துவிட முடியாது!

நண்பர்களே! தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.  நாம் சொல்லுவதெல்லாம் இருப்பதை அப்படியே கொண்டு போய் கொட்டாதீர்கள் என்பது தான்.   கொஞ்சம் கட்டுப்பாட்டோடு செயல்படுங்கள். எப்போதுமே உங்கள் பணம் தான்  உங்களுக்கு உதவும். ஆயிரம் பேசலாம் அவசரத்தின் போது அனைவரும் கைவிரித்து விடுவார்கள்!

பெருநாளைக் கொண்டாடுங்கள்.  அதுவும் உங்கள் பணத்தில் கொண்டாடுங்கள். கடன் வேண்டாம்! கடனே வேண்டாம்! அளவோடு, மகிழ்ச்சியோடு  உங்கள் பணத்தில் குழந்தைகளோடு கொஞ்சி மகிழுங்கள்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment