Tuesday 21 November 2023

புதிய இந்தியர் கட்சி!

 


நமது மலேசியத் திருநாட்டில் புதிதாக ஓர் இந்தியர் அரசியல் கட்சி உருவாகிறது. வரவேற்கிறோம்!

பொதுவாக புதிதாக வரும்  எந்தக் கட்சிகளையும் நாம் ஆதரிக்கும் நிலையில் இல்லை. அந்தக் கட்சிகளால் எந்தப் பயனுமில்லை. அவர்களால் எதுவும் ஆகப்போவதுமில்லை. சும்மா பெயருக்காகக் கட்சிகளைத் தொடங்கலாம்.  எனக்குத் தெரிந்து ஏகப்பட்ட  இந்தியர்களைக் குறி வைத்து  பல கட்சிகள் இருக்கின்றன.  தேர்தல் காலங்களில் யாருடன் கூட்டணி சேருவது  என்பது தான் அவர்களின் முக்கிய பணியாக இருக்கும். இன்னும் சில கட்சிகள் தேர்தல் காலங்களில்  அரசாங்கத்திடமிருந்து  மான்யம் பெறுவதைக் குறியாகக்  கொண்டிருக்கும்.   இதையெல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆனால் "உரிமை" நிலை வேறு.  முன்னாள் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்களால் களம் இறக்கப்படுகிறது. 

மலேசிய அரசியலில்  நமக்குத் தெரிந்தவரை பேராசிரியர் இராமசாமி அவர்களின் நேர்மையைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். துன் சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்கிறார்  டாக்டர் இராமசாமி அவர்கள்.  அதனால் அவரால் தொடங்கப்படும் "உரிமை"  நிச்சயமாக இந்தியர்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டும் கட்சியாக  இருக்கும் என நம்பலாம். 

இந்தியர்களின் பலம் நாட்டின் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. ஆனால் நமது வாக்கு  வங்கி  எப்படி அமைய வேண்டும்  என்பதில் நமக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  இன்றைய நிலையில் நாம் ஒப்பிடும்போது  நமது எதிரிகளுக்குத்தான்  நமது வாக்குகள்  சாதகமாக அமைகின்றன! 

நமது வாக்குகளைப் பெற்ற பின்னர் நமக்கே எதிரியாகத்தான் இருக்கிறான் இன்றைய  அரசியல்வாதி.  என்ன செய்ய முடியும்?  நம்மிடையே  சரியான புரிதல் இல்லை என்பதால்  நாம் எல்லாகட்சிகளுக்கும்  வாக்களிக்கிறோம்.  அங்கு தான்  நாம் தவறு செய்கிறோம் என்பது நமக்குத் தெரியவில்லை. நமக்கு யார் சாதகமாக இருக்கிறார்களோ  அவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். அந்த சாதகமானவர்  யார் என்பதை  தலைமைத்துவம் தீர்மானிக்க வேண்டும்.

அதற்குத்தான் நமக்கு ஒரு கட்சி தேவை. இத்தனை ஆண்டுகளாக நாம் நேசித்த கட்சிகள்  நமக்கு உதவினதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்ததும்  எட்டிப் போய்விடுகின்றனர்! கிட்டே நெருங்கினால்   பிரச்சனையைத் தீர்க்கும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. யாரிடமும் இனப்பற்று என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

உரிமை எப்படி இயங்கப் போகிறது, அதன் வழிகாட்டுதல் எப்படி இருக்கப் போகிறது என்பதையெல்லாம் சீக்கிரம் பொது மக்களுக்கு வந்து சேரும்.

நிச்சயமாக நமக்கு ஒரு கட்சி தேவை. அது நமது ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்!

No comments:

Post a Comment