Friday 10 November 2023

பிரதமர் தவிர்க்கிறாரா?

 

பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியர்களைப் புறக்கணிக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் மேல் சமீபகாலமாக சாட்டப்படுகின்றது.

அவர் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது  நம்மால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் சில நிகழ்வுகளை நம் முன் வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் 'ஆமாம்! அது உண்மை தான்!'  என்று ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான்  இருக்கிறது என்பதும் சந்தேகமில்லை!

தமிழர்களின் மாபெரும் விழாவாம் தைப்பூசத் திருவிழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒன்று. அடுத்து தீபாவளி கொண்டாட்டத்தில் அவர் பங்குப் பெறவில்லை என்பது மற்றொன்று.

தைப்பூச கொண்டாட்டத்தின் போது அவரின் உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் ஐ.ஜே.என். இருதய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.  பொய் சொல்ல ஒரு நியாயமுமில்லை!

தீபாவளி கொண்டாட்டத்தின் போதும் அதே குற்றச்சாட்டு. அவர் கலந்து கொள்ளவில்லை. இன்று பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது  என்பது அனைவருக்கும் தெரியும். பல்லாயிரகணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.   சாப்பிட உணவு இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, உறங்க இடமில்லை, சிகிச்சை பெற மருத்துவமனை இல்லலை - அனைத்தையும் இழந்துவிட்டு  நிராயுதபாணியாக நிற்கின்றனர் பாலஸ்தீன மக்கள். இன்னும் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றன இஸ்ராயேல் படைகள்.

இந்த நிலையில் எந்த ஒரு மனிதரும் சாதாரண சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாது.  அப்படிப்பட்ட நிலையில் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு  எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்  என்கிற கேள்வியும் எழுகிறது. சாதாரண மனிதர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடு இல்லை. ஆனால் கொஞ்சம்  அழுத்தம், பற்று, பாசம் உள்ளவர்களுக்கு  இதனைப் பெரும் கொடுமையாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.

பிரதமர் கலந்து கொள்ளாததை  நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனைப் பெரிதுபடுத்தி, என்னமோ உலகமே அழிந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை எழுப்ப வேண்டாம்.  

நமது எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். 'கலந்து கொண்டால் நல்லது கலந்து கொள்ளாவிட்டால் அதைவிட நல்லது'  அவ்வளவு தான்.  எது நடந்தாலும் அது நன்மைக்குத்தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

பிரதமர் இந்தியர்களைப் புறக்கணிக்கிறாரா? ஒரே வழி நீங்களும் அவரைப் புறக்கணியுங்கள்!

No comments:

Post a Comment