Tuesday 28 November 2023

முனைவர் பட்டம் நோக்கி நஜிப்!

 

தனது கல்வியைத் தொடர்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப். நல்ல செய்தியாகத்தான்  நான் நினைக்கிறேன்.

அவரைப்பற்றி நாம் என்னன்னவோ படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம்.  இந்தியர்களுக்கு அவர் செய்த சில நல்ல காரியங்களை நினைத்தும் பார்க்கிறோம்.  உண்மையில் அவர் தான் இந்தியர்களுக்கு  உருப்படியான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதை மறப்பதற்கில்லை.

அவர் செய்த ஊழல் காரியங்களுக்காக இன்றளவும் நாம் அவரைக் குறை சொல்லவில்லை.  அவர் மனைவியைத்தான் விரல்கள் சுட்டுகின்றன. அன்பு மனைவிக்காக  அவர் செய்த  துர்காரியம்.

அதை விடுவோம். இப்போது சிறையில் இருக்கும் நஜிப் தனது கல்வியைத் தொடர்கிறார் என்பது தான்  செய்தி.

தான் செய்த குற்றத்திற்காக பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை  அனுபவிக்கும் நஜிப் "எதுவும் எனக்குத் தடையாக இருக்கப் போவதில்லை" என்று  தனது பொருளாதாரக் கல்வியை  மீண்டும்   தொடர்கிறார்.  பிரிட்டன் நோட்டிங்ஹாம் பல்கலைகழகத்தின், 1974 ஆண்டில் பட்டம் பெற்ற,     முன்னாள் மாணவரான நஜிப்  ஒரு பொருளாதார பட்டதாரியாவார்.  இப்போது யு.கே.எம். எனப்படும்   மலேசிய தேசிய பல்கலைக்ழகத்தில்  பொருளாதாரத்தில்   தனது முனைவர் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்வது  இருக்கப்போகும் நாள்களில் அவர் சோம்பிக்கிடக்கப் போவதில்லை  என்பதைத்தான் காட்டுகிறது.

இதற்கு முன்பும், இப்போதும் கூட, காஜாங் சிறையில் இருக்கும்  சிறைத் தண்டனை அனுபவிக்கும் பலர்  பல துறைகளில் கல்வி கற்றுப் பட்டமும்  பெற்றிருக்கின்றனர். ஏன் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தலைவர் லிம் கிட் சியாங் கூட  தனது சட்டக்கல்வியை இதே சிறைச்சாலையில் தான் படித்தவர்.  அதனால் நஜிப் தனது பொருளாதார முனைவர் பட்டத்துக்காக  படிப்பதில் ஒன்றும் அதிசயமல்ல.  வீணே நேரத்தை வீணடிப்பதைவிட  கல்வியைத் தொடர்வது நல்ல காரியம். 

இது போன்று கல்வி கற்பவர்களை நாமும் வரவேற்போம்.  நடந்து போன காரியங்களை நினைத்துப் புலம்புவதைவிட வரப்போகும் நல்ல காரியங்களை  நினைத்து அகமகிழ்வோம்!

No comments:

Post a Comment