Saturday 18 November 2023

மூட்டையைக் கட்டு'பா!

 

                                        MON CHINESE BEEF ROTI RESTAURENT
ஒரு   சீன முஸ்லிம் உணவகத்தில், அதுவும் நமது நாடான மலேசியாவில், சமீபத்தில்  நடந்தேறிய நிகழ்வு இது.

உணவகத்தில்  சமையல் பகுதியில் வேலை செய்யும் ஒருவர் கிறிஸ்துவர்கள் அணியும் சிலுவையை  தனது கழுத்தில் அணிந்திருந்தார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் செய்கின்ற வேலையோ ரொட்டிகளைப் பெட்டியில் அடுக்குகின்ற வேலை.  வாடிக்கையாளர்களைச் சந்திக்கக் கூடிய வேலையும் அல்ல. ஆனால் அந்த நிர்வாகம் தனது முஸ்லிம் வாடிக்கையாளர்களின்  'பாதுகாப்பு' கருதி அவரைப் பணிநீக்கம் செய்துவிட்டது.

நாம் இந்நாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்நோக்கியதில்லை.  ஏன், நான் கேள்விப்பட்டதில்லை.  அவரவர் தங்களது மதச் சின்னங்களை அணிவதை இங்கு யாரும் தவறு என்று சொன்னதில்லை.

அந்த நிர்வாகம் அவரை வேலைக்கு எடுக்கும் போது அவரது மதச்சின்னம் அவரது கழுத்தில் இருப்பதை பார்த்துத்தான் இருப்பார்கள்.  அப்போதே அவரை வேலைக்கு எடுக்காமல்  இருந்திருக்கலாம்.  அல்லது அந்தச் சின்னத்தை மறைத்து வைக்கும்படி சொல்லியிருக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன.  அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல்  அவரை வேலையைவிட்டுத் தூக்குவது சரியான  செயலாகாது. அந்த மனிதரின் குடும்ப சூழல் என்னவென்று தெரியாத நிலையில் அவரது வேலையில் கைவைப்பது  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சமீபகாலங்களில் இது போன்ற அடாவடித்தனங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான்  இருக்கிறோம். 

ஒரு சில இந்து சகோதரர்கள் விபூதி, பொட்டு என்று வேலையின் போது வைத்துக் கொண்டு போகிறார்கள்.   இதையெல்லாம் யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. முஸ்லிம் சகோதரர்கள்  தலையில் சோங்கோக்  வைத்துக் கொண்டு போகிறார்கள்.  இதனையெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் நாம்  அன்றாடம் பார்ப்பது தான்.

மதச்சின்னங்களை அணிய வேண்டாம் என்றால் அவர்களை வேலைக்கு எடுக்கும் போதே சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அவர்கள் வேறு வகையான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். பல இனங்கள், பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில்,  ரொம்பவும் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் நமது ஆசை.

அதே வேளையில்,  வேலையில் இருந்த ஒரு நபரை மதச்சின்னத்தை அணிந்தார்  என்பதற்காக "மூட்டையை கட்டு'பா!" என்று சொன்னது வருத்தத்திற்குரியது தான்!'


No comments:

Post a Comment