Monday 6 November 2023

இதனை எதிர்பார்க்கவில்லை!

 

இப்படி ஒரு தீர்ப்பை நாம் எதிர்பார்க்கவில்லை.

ஓர் இளம் அரசியல் தலைவர். நல்ல சிந்தனையாளர். நல்ல இளைஞர்.  மலேசியர்களின்  வருங்காலம்  என்று பாராட்டப்பட்டவர். அத்தனையும் புஸ்வாணமாகி விட்டதே  என்று நினைக்கும் போது 'யாரைத்தான் நம்புவதோ' என்பது உண்மையில்  நமக்குப் புரியவில்லை!

ஆமாம்! மூடா கட்சியின் தலைவர் சைய்ட் சாடிக்கைப்  பற்றிதான்  பேசிக் கொண்டிருக்கிறோம்.  மிகக் கடுமையான தண்டனை என்பதில் எந்த மாறுபாடும் இல்லை.  அப்படி என்னதான் தண்டனை? ஒரு கோடி வெள்ளி அபராதம், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, இரண்டு பிரம்படிகள். 

இரண்டு பிரம்படிகள் என்னும் போது அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தண்டனை உண்டு என்பதை முதன் முதலாகக் கேள்விப்படுகிறோம்! நாம் என்னவோ கொலைகாரன், கொள்ளைக்காரர்களுக்குத்தான்  இந்தத் தண்டனை என்று நினைத்தோம்.  ஒரு கோடி வெள்ளி அபராதம் என்றால் -  கொள்ளை தான் காரணமாக இருக்கலாம். 

நமக்கு உள்ள வருத்தமெல்லாம் இந்த இளம் வயதில்  இவருக்கு இப்படி ஒரு தண்டனையா என்பது தான்.  நல்ல எதிர்காலம் உள்ள தலைவராக  வலம் வந்து கொண்டிருந்தார். எல்லாம் ஒரு நொடியில் சுக்கு நூறாகிவிட்டதைக்  காணும் போது 'சே! என்னடா அரசியல்! இப்படியெல்லாம் இளைஞர்களைச் சீரழிக்கிறதே' என்று தான் எண்ணத் தோன்றுகிறது!

ஓர் இளைஞனின் அரசியல் ஆரம்பமே இப்படியா இருக்க வேண்டும்? அம்னோ அரசியல்வாதிகள் என்றால் நமக்குத் தெரியும். ஏன்? ம.இ.கா. வுக்கும் நிறைய பங்குண்டு.    அவர்கள் அரசியலில் நல்ல் பக்குவம் பெற்றவர்கள்.  அதனால் பலவற்றிலிருந்து அவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.  ஆனால் சயது சாடிக் இன்னும் அரசியல் பக்குவம் பெறாதவர், எப்படியோ சரியாக மாட்டிக் கொண்டார்!

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது தான் நியதி. சிறியவர் பெரியவர் என்கிற பாகுபாடு இல்லை. அதுவும் ஊழல் செய்வது  தெய்வக் குற்றம்.  மனிதகுலத்திற்கே எதிரி.  மன்னிக்கப்பட முடியாதவர்கள். கூடாதவர்கள்.

எப்படியோ சயது சாடிக் மேல்முறையீடு  செய்வார். அதன் பின்னர் தான் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதுவரை  அவர் நிரபராதி தான்!

No comments:

Post a Comment