Wednesday 17 January 2024

இன்னும் ஏன்?



முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "விசுவாசம்" பற்றியான செய்தி இன்னும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத அளவுக்கு இன்னும் நீண்டு கொண்டே போவது வருத்தம் அளிக்கிறது.

அவருடைய கருத்தைச் சொன்னார்.  அதனை இந்த அளவுக்குப் பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை.

டாக்டர் மகாதிர் மலேசிய அரசியலில் செல்லாக்காசாகிப் போனவர். அவர் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே அவருடைய கருத்தை யாரும் மதிக்கவில்லை.

இப்போது அவரின் நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. எதையும் சொல்லுவார், எதையும் பேசுவார்  என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்.அவருடைய அரசியல் ஆரம்பமே இனக் கலவரத்தில் தோன்றியது தான்.  அதை வைத்தே அவர் அரசியல் நடத்தியவர்.

அப்போது பேசியது போலவே இப்போதும் பேசுகிறார். இனங்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அவரது இயல்பு. ஒரு சரித்திர சான்றைச் சொல்லுவார்களே:  ரோம் நகரம்  பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தனாம். அந்த கதை தான்  மகாதிர்.  நாட்டில் கலவரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  தான் மட்டும் மகழ்ச்சியாக வாழ வேண்டும். அது தான் மகாதிர்.

அமைதியை விரும்பாதவர்.  மக்களின் மகிழ்ச்சியை விரும்பாதவர். இன்று நாடு இந்த அளவுக்கு சீர்கேடு அடைந்ததற்கு அவர் தான் காரணம். சீனர்கள், இந்தியர்கள்  - வந்தேறிகள் அவர் உள்பட. இந்த வந்தேறிகளின்  பணத்தை வைத்துத்தான்,  தான், தன் குடும்பம், தனது நண்பர்கள் அனைவரையும் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடிஸ்வரனாக்கியவர்!  அவரது குடும்பத்தினரின் சொத்துகளைக் கணக்கெடுத்தாலே  அது புரிந்துவிடும்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?  அவரை நாம் மறந்துவிட வேண்டும்.  அவர் இந்தியர்களுக்குச் செய்த துரோகங்கள் நிறைய உண்டு. அதுவும் பொருளாதார ரீதியில் நம்மை மொட்டை அடித்தவர்  அவர்     எப்படியும் பேசுவார். 

அதனால் அவரை மன்னிப்போம்! மறப்போம்!   வயதானவர்கள் மீது நமக்கொரு மரியாதை உண்டு.    இதனையும் அவருடைய உளறல்களில் ஒன்றாக எடுத்துக் கொள்வோம்.

இனி அவரைப்பற்றி பேசுவதைத் தவிர்ப்போம்!

No comments:

Post a Comment